அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா 6 ஆக உயர்வு.. இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் 7 தொகுதிகள்!

  • சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் கரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்து இருப்பதால், இதுவரை காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த தவெக அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டார். இதன்படி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த மே 13 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    Advertisement

    அவர்களில் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து இருக்கும் விஜயபாஸ்கரும் ஒருவர். கட்சித் தலைமை மீதான அதிருப்தியில் இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர்\ இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் செயல்படும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 227 ஆகக் குறைந்துள்ளது.

    இதுவரை காலியாக உள்ள தொகுதிகள் விவரம்:

    * விராலிமலை (விஜயபாஸ்கர்),
    * மதுராந்தகம் (மரகதம் குமரவேல்),
    * பெருந்துறை (எஸ். ஜெயக்குமார்),
    * தாராபுரம் (பி. சத்யபாமா),
    * அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா)
    * திருச்சி கிழக்கு (முதல்வர் சி. ஜோசப் விஜய் - போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் ஒன்றில் ராஜினாமா),
    * கரூர் (எம்.ஆர் விஜயபாஸ்கர்)

    Advertisement

    7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

    ஆகிய 6 இடங்களுடன் கரூரையும் சேர்த்து 7 ஆக உயர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் கட்சி வாரியாக பார்த்தால், தவெக 107 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திமுக 59, அதிமுக 41 (தேர்தலில் வென்றது 47), காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, கம்யூனிஸ்ட்கள் உள்பட இதர கூட்டணிக் கட்சிகள் 11 உள்ளன.

    தற்போது 7 தொகுதிகள் காலியாக இருக்க கூடிய நிலையில் இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிகிறது. தேர்தல் ஆணைய விதிகளின் படி ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம் ஆகும். ஏற்கனவே, 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நிலையில், கரூரையும் சேர்த்து 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

    Advertisement

    தவெக வியூகம் என்ன?

    தவெகவிற்கு தற்போதைய நிலவரப்படி 107 இடங்களே உள்ளன. தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது. கூட்டணி கட்சிகளையே பெரும்பான்மைக்கு நம்பியுள்ள நிலையில் பெரும்பான்மையை நெருங்கி வரும் முனைப்பில் இந்த 7 தொகுதிகளிலும் கட்டாயம் வெல்ல தவெக வியூகம் வகுத்து வருகிறது. அதே நேரத்தில் தவெகவிற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை காட்டும் விதமாக இடைத்தேர்தலில் வீழ்த்தி வெற்றியை பெற எதிர்க்கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன.

    இதில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சீமான் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகிறார்கள். அண்ணாமலையை பெருந்துறை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல் களம் மினி தேர்தல் ரேஞ்சுக்கு பரபரப்பாகி வருகிறது.

    English Summary

    Tamil Nadu By Election: AIADMK MLA M.R. Vijayabaskar resigned from the Tamil Nadu Assembly amid the ongoing political developments. His resignation raises the number of AIADMK MLAs who have quit to six. With seven Assembly seats now vacant, by-elections are expected to be announced soon.