விஜய்க்கு தான் விஷப் பரிட்சை! அதிமுகவை விடுங்க..தேர்தல் முடிவுகளால் திமுகவுக்கு என்ன லாபம் தெரியுமா?

  • சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, திமுக ஆகிய மூன்று முக்கிய கட்சிகளுக்கும் இந்த தேர்தல் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தவெக, அதிமுகவை தவிர்த்து திமுக தனது அரசியல் பலத்தை நிரூபிக்கும் களமாக இந்த தேர்தலை பார்க்கும் நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் அக்கட்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    தமிழகத்தில் காலியாக 7 தொகுதிகள் இருந்த நிலையில் தேர்தல் வழக்கு காரணமாக விராலிமலை, கரூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மதுராந்தகம், தாராபுரம் 2 தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    Advertisement

    இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் என 5 முனைப் போட்டி நிலவியது. கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் வெற்றி தோல்வியை தாண்டி தமிழக அரசியலில் அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவாகி இருக்கும் நிலையில், இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே கடந்த சட்டசபை தேர்தலில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்ற நிலையில் தற்போதும் அந்த செல்வாக்கு தொடர்கிறதா? அனைத்து தொகுதிகளிலும் விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறதா? என்பதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் கடந்த நான்கு மாத ஆட்சியின் செயல்பாடுகள், அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவற்றை வரையறுக்கும் தேர்தலாகவும் இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

    மற்றொருபுறம் கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம் மதுராந்தகத்தில் அதிமுக வசம் இருந்து நிலையில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் அந்த கட்சிக்கு முக்கியமான சோதனையாக கருதப்படுகிறது. இந்த இரு தொகுதிகளில் வெற்றி பெறுவது கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியை எடப்பாடி பழனிச்சாமி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என அதிமுக நம்புகிறது. அதே நேரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க விட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை, தேர்தல் வியூகம், கூட்டணி ஆகியவை குறித்து கேள்விகள்ளை எழுப்பும். ஏற்கனவே அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த தேர்தலில், நாம் தமிழர். கம்யூனிஸ்டுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது. ஆனால் எதிர்க் கட்சியான திமுக இந்த இடைத்தேர்தல் முடிவுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தால் அது தொண்டர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும். கட்சியின் தேர்தல் வியூகம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

    அது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளை நம்பி திமுக இல்லை என்ற கருத்தை திமுக தலைவர்கள் வலுவாக முன் வைப்பார்கள். இது வரும் தேர்தல்களில் அந்த கட்சியின் நம்பிக்கையை அதிகரிக்கும். முக்கிய தலைவர்களான ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகள், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி ஆகியவை திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த கட்சி இருக்கிறது. திமுகவுக்கு சாதகமான முடிவுகள் இந்த தேர்தலில் கிடைத்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அது மேலும் ஊக்கத்துடன் முன்னெடுக்கும்.

    Advertisement

    அதுமட்டுமில்லாமல் சினிமா கவர்ச்சியில் விஜய் வெற்றி பெற்றார் என்ற கருத்தை திமுக தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில் இந்தத் 2 இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் தோற்று விட்டால் அதையே தனது பிரச்சார ஆயுதமாக ஐந்து ஆண்டுகளுக்கும் திமுக முன்னெடுக்கும். மேலும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பது, வேறு ஆட்சியை சிறப்பாக முன்னெடுப்பது வேறு. இதில் தமிழக வெற்றி கழகம் தோற்றுவிட்டது எனக் கூறியே ஐந்து ஆண்டுகளை திமுக கடத்தி விடும். அதற்காகவே இந்த தேர்தல் முடிவுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது திமுக தலைமை.

    English Summary

    Madurantakam and Dharapuram bypoll results could shape TVK’s political credibility, AIADMK’s leadership prospects and DMK’s strategy for future elections.