சென்னை: பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் மாறி இருக்கிறது தமிழக அரசியல் களம். 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இன்னொரு தேர்தலுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூட்டணிக் கணக்குகள் மாறி இருக்கிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 80 சதவீத கூட்டணி மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கூட்டணிகளால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பது குறித்து பார்க்கலாம்
தமிழகத்தில் திருச்சி கிழக்கு,விராலிமலை, கரூர், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், தாராபுரம் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கிறது. 5 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தற்போது தாராபுரம், மதுராந்தகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க.. அடுத்த நாலே வேட்பாளர்களையே களத்தில் இறக்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டிடுவார்கள் என திமுக அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் அவர்கள் தொகுதியில் போட்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களை களத்தில் இறக்கிய நிலையில் அடுத்த நாள் அதிமுகவின் மதுராந்தகம் கணிதா சம்பத்தும், தாராபுரம் பானுமதியும் போட்டிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதற்கு இடையே திமுக கூட்டணியில் இடம் பெற்று தற்போது ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்டுகளும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருக்கின்றனர். தற்போதைய சூழலில் 5 முனைப் போட்டி என சொல்லப்பட்டாலும், தவெக - திமுக - அதிமுக இடையே தான் போட்டி என்கின்றனர் அப்பகுதி மக்கள் அதே நேரத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கு இடையே கூட்டணிகள் பெரிய அளவில் மாறி இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், ஆகியவை இருந்தன. தற்போது அந்தக் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு தாவி விட்டன. மேலும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் எனவும் அவர்கள் சொல்லியுள்ளனர். அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தல் போட்டியிடுகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. மற்றொருபுறம் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது புரட்சி பாரதம், தமாகா ஆகிய கட்சிகள் விலகிவிட்டன. பாஜக அதிமுகவுக்கு ஆதரவளித்திருக்கிறது. பாஜகவும் கூட்டணியில் தான் இருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் பாமக யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்த நிலையில், தமாகா தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது. கடந்த தேர்தலில் தனித்து பேட்டியிட்ட தவெக, தற்போது, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக, தமாகா ஆதரவுடன் களத்தில் உள்ளது. வழக்கம் போல் நாம் தமிழர் தனித்து நிற்கிறது. இப்படியாக 2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் மாறி இருக்கும் நிலையில், யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இடைத்தேர்தல்
திமுக கூட்டணி
2026 சட்டசபை தேர்தல்
தமிழக வெற்றிக் கழகம்
அதிமுக கூட்டணி
நாம் தமிழர்