தட்டித் தூக்குமா தவெக? தில்லாக நிற்கும் திமுக.. குறுக்கே அதிமுக! 2 தொகுதிகளில் கில்லி எந்த கட்சி?

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முதல்வர் விஜய்க்கு முதல் அக்னி பரிட்சையாக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிமுக கடந்த தேர்தலில் இந்த தொகுதிகளிலும் வென்றிருந்த நிலையில் தற்போது அங்கு என்ன நிலவரம்? எந்த கட்சி பலமாக இருக்கிறது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழக அரசு முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து இருக்கிறது. ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கியமாக குதிரை பேர குற்றச்சாட்டு விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது.

    Advertisement

    சட்டசபை தேர்தல் முடிவடைந்த உடன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவளித்தன. இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.

    தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்20க்கும் மேற்பட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

    Advertisement

    முன்னதாக திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தனர்.

    இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் தற்போது தாராபுரம் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தேர்தல் வழக்குகள் காரணமாக மற்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தற்போது 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபர் ஆறாம் தேதி தேர்தல் நடக்கிறது முன்னதாக இந்த மாதத்திலேயே வேட்பு மனு தாக்கல் வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுவை வாபஸ் பெறுவது, இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகியவை இம்மாதத்திலேயே வெளியிடப்பட இருக்கிறது.

    கடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம் தனி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேலும், திமுகவின் அமுலு பொன்மலரும், தமிழக வெற்றிக் கழகத்தின் எழில் கேத்தரிம், நாம் தமிழரின் ஜானகிராமனும் களம் இறங்கினர். 1 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில் மரகதம் குமரவேல் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் 62,000 வாக்குகளும், திமுக வேட்பாளர் அமலு பொன்மலர் 59 ஆயிரம் வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகளும் பெற்றனர்.

    Advertisement

    இதே போல தாராபுரம் தனித் தொகுதியில் அதிமுகவின் சத்தியபாமா, திமுகவின் இந்திராணி, தமிழக வெற்றி கழகத்தின் கௌரி சித்ரா, நாம் தமிழர் திவ்யா ஆகியோர் களமிறங்கினர். 1 லட்சத்து 99 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில் சுமார் 16,000 வாக்குகள் அதாவது 81,000 வாக்குகள் பெற்று சத்தியபாமா வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி 64,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கௌரி சித்ரா 46,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளும் பெற்றனர்.

    இந்த நிலையில் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சதியபாமா ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் தவெக சார்பில் களம் இறங்கலாம் என சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சியான திமுக தேர்தலை புறக்கணிக்கும் என சொல்லப்பட்டுள்ள நிலையில், களத்தில் இறங்குவது தான் சரி என சீனியர்கள் சொல்லி இருப்பதால் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. நாம் தமிழர் அதிமுகவும் இடைத்தேர்தலில் களம் இறங்குகின்றன.

    Advertisement

    கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரு பெண் வேட்பாளர்களுமே சொந்த தொகுதியில் செல்வாக்கு கொண்டவர்கள். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குகளும் சேரும் என்பதால் ஓரளவு அவர்களுக்கு பலம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஆட்சி மீதான அதிருப்தி, சட்டம் ஒழுங்கு என பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திமுகவும் அதிமுகவும் அவர்களுக்கு கடும் போட்டி கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இரட்டை இலைக்கென அங்கு ஏராளமான வாக்குகள் இருக்கிறது. எனவே வெற்றி அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடாது. இதனால் 2 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் காலத்தில் அனல் பறக்கும் என்கின்றனர்.

    English Summary

    Madurantakam and Dharapuram bypolls set up a fierce contest as TVK, DMK and AIADMK battle for crucial seats on October 6.