59 ஆண்டுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. அமைச்சராகும் ராஜேஷ் குமார் – விஸ்வநாதன்! பின்னணி

  • சென்னை: முதல்வர் விஜய்யின் தமிழக அமைச்சவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், மதுரை மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர் இந்நிலையில் தான் இவர்கள் யார்? முதல்வர் விஜய் என்னென்ன துறைகளை ஒதுக்க வாய்ப்புள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். கடந்த 16 ஆம் தேதி ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    Advertisement

    இதையடுத்து முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால்
    ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேபினட்டில் இடம் பெற வேண்டும் என்று விஜய் விரும்பினார். அமைச்சர் பதவி வழங்குவதாக அவர் உறுதியும் அளித்தார்.

    ஆனால் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டன. மாறாக விசிக, இந்தியன் யூனியன் லீக் உள்ளிட்ட கட்சிகள் விஜய் வழங்கிய ஒரு அமைச்சர் பதவியையும், காங்கிரஸ் கட்சி விஜய் வழங்கிய 2 அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் மற்றும் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க நேற்று காங்கிரஸ் மேலிடம் அனுமதி வழங்கியது.

    Advertisement

    இதன்மூலம் இன்று காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகியோர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறையும், ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறையும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    தமிழகத்தில் கடந்த 1967 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஹேப்பியாகி உள்ளனர்.

    இதில் ராஜேஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக உள்ளார். கிள்ளியூர் தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வாகி உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் மார்சல் நேசமணியின் முக்கிய தளபதியான பொன்னப்பா நாடாரின் பேரன் ஆவார். 2016, 2021 சட்டசபை தேர்தலை தொடர்ந்து 2026ம் ஆண்டிலும் வெற்றி பெற்ற நிலையில் இன்று அமைச்சராகிறார்.

    Advertisement

    அதேபோல் விஸ்வநாதனை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநில பொறுப்பாளராகவும் விஸ்வநாதன் உள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை சேர்ந்தவர். 61 வயதான இவர் சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடைசி நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் பொதுத்தொகுதியில் களமிறங்கி வென்று அசத்திய நிலையில் இன்று அமைச்சரானார்.

    English Summary

    CM Vijay's lead Tamil Nadu Cabinet is set to be expanded today. As part of this expansion, two ministerial portfolios are to be allocated to the Congress party. Rajesh Kumar, the Congress MLA representing the Killiyoor constituency, and Viswanathan, the MLA for the Melur constituency in Madurai, are scheduled to be sworn in as ministers today.