சென்னை: தமிழகத்தில் நாளை முதல் கறிக்கோழி விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வணிகர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கோழிகளின் எடையை அதிகரிக்க விற்பனைக்கு அனுப்புவதற்கு, சற்று நேரம் முன்பு வரை, அதிக தீவனங்கள் கொடுப்பதாக வணிகர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனால் வணிகர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் கோழி பண்ணை உரிமையாளர்களை கண்டித்து கோழி கறி வணிகர்கள் நாளை முதல் போராட்டம் நடத்தப் போவதாகவும், கறி விற்பனை செய்யப்படப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர். எடை மோசடியை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் தஞ்சையில் நடந்தது. இந்த கூட்டத்தில் " கறிக்கோழிகலை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிப்பதில்லை. இதனால் தீவனமும் குடிநீரும் கறிக்கோழியில் தேங்கி 200 கிராம் வரை கூடுதல் எடை ஏற்பட்டு சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கோழிகளுக்கு கடைசி நிமிடம் வரை தீவனம் கொடுப்பதால் அவற்றின் உடலில் தீவனம் ஜீரணமாகாமல் அப்படியே இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் எடையுடன் இருப்பதாக கூறி கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தீவனம் ஜீரணிக்காமல் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, இறைச்சியின் தரம் பாதிக்கப்படுகிறது என கோழி க் கறி வணிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவாக சொல்ல வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 31ஆம் தேதி முதல் கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பலரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் 65 ,சிக்கன் தந்தூரி, சிக்கன் மிளகு வறுவல் உள்ளிட்டவை ஹோட்டல்களில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரம் கறிக்கோழி கடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மட்டனின் விலை உயர்வு என்பதால் ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிக்கன் கறி கொடுத்து வரும் நிலையில் அதுவும் நாளை முதல் கிடைக்காது என்ற அறிவிப்பால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நாளை முதல் வணிகர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் சரிவர தெரியவில்லை.