மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!

  • சென்னை: இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் மாடுகளை பலியிட தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    பக்ரீத் பண்டிகையை ஒட்டி மாடுகளை பொது இடங்களில் பலியிடக்கூடாது என்று வந்திருந்த உத்தரவு கடும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இப்படி இருக்கையில் சிபிஎம் வெளியிட்டிருக்கும் அறிக்கை கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் 27.5.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

    பாரா 16ல் தன்னுடைய வாதங்களை குறிப்பிட்டு மேலே உள்ள விதிமுறைகளையெல்லாம் கணக்கில் கொண்டால் அனுமதிபெற்றுள்ள இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் பலியிடக் கூடாது என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அது தான் சட்டம் என்று அவர்கள் கருதும்பட்சத்தில் அனைத்து விலங்குகளையும் பலியிடுவதற்கு தடை விதித்திருக்கக் கூடும். ஆனால், மாடு மற்றும் கன்றுகளுக்கு மட்டும் பொருந்துவதாகவும் பக்ரீத் என்கிற பண்டிகையை குறிப்பிட்டும் தீர்ப்பு வழங்கியிருப்பது முற்றிலும் ஆட்சேபகரமானதும், உள்நோக்கமும் கொண்டதாகும்.

    Advertisement

    ஆடு, மாடு, கோழிகளை நேர்த்திக் கடன் செய்யும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. உணவுக்காகவும் மாடுகளையும் கன்றுகளையும் பலியிடுகிற வழக்கமும் இருக்கவே செய்கிறது. இதனை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுவது ஒருபகுதி மக்களின் உணவுப் பழக்கத்திலும், வழிபாட்டு முறைகளிலும் தலையிடுவதாகும்.

    கடந்த காலத்திலும் மத துவேஷத்தோடு இத்தகைய கோரிக்கைகள் வந்தபோதெல்லாம் இந்த பழக்கத்தை கடைபிடிப்போரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு முதல் தினம் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருப்பது பொருத்தமற்றதாகும்.

    எனவே, காலதாமதமின்றி மேல்முறையீடு செய்து உரிய நியாயத்தையும், மக்களின் உணவு உரிமையை நிலைநாட்டிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு சிபிஎம் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில் இக்கட்சியின் வலியுறுத்தல் கவனம் பெற்றிருக்கிறது. விஜய் இதற்கு என்ன பதிலளிக்கப்போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    English Summary

    Today, the festival of Bakrid was celebrated with great fervor. However, yesterday, Madras High Court Justices G.R. Swaminathan and V. Lakshminarayanan issued an order imposing a ban on the slaughter of cattle. In light of this, P. Shanmugam, the State Secretary of the CPI(M), has stated that the Tamil Nadu government should file an appeal challenging this order.