ரூ 25 லட்சமான முதல்வரின் மருத்துவ காப்பீட்டு தொகை! பழைய அட்டையை கூட பயன்படுத்தலாம்! அமைச்சர்

  • சென்னை: முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் தொகை ரூ 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே உள்ள பழைய அட்டைகள் மூலமாகவே மருத்துவமனைகளில் சிகிச்சையை பெறலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூ 1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட Lecturer Halls திறக்கப்பட்டன. இதை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.

    Advertisement

    இந்த நிகழ்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகை ரூ 25 லட்சமாக விரைவில் உயர்த்தப்படும்.

    இதற்காக புதிய காப்பீட்டு அட்டை எல்லாம் தேவையில்லை. பழைய காப்பீட்டு அட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லாதவர்கள் வேண்டுமானால் விண்ணப்பித்து புதிய கார்டு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 25 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

    தேவையான ஆவணங்கள்

    • ஆண்டு வருமானம் ரூ 1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
    • விஏஓவிடம் இருந்து வருமான சான்றிதழ் தேவை
    • ஆதார் கார்டு, ரேஷன் கார்டு

    இந்த அட்டையை பெறுவது எப்படி?

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு மருத்துவக் காப்பீடு அலுவலகத்தை அணுக வேண்டும். பிறகு விஏஓவிடம் வாங்கிய வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    ஆவணங்களை சரிபார்த்து பயோமெட்ரிக் சரிபார்ப்பு முடிந்த பிறகு அட்டை வழங்கப்படும்.

    Advertisement

    இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்

    மனைவி, குழந்தைகள், குடும்பத் தலைவரின் பெற்றோர்

    ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

    எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை

    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனை
    • அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பெற முடியாது
    • என்னென்ன சிகிச்சைகளுக்கு அனுமதி என்ற விவரத்தை மருத்துவமனையில் தெரிந்து கொள்ளலாம்.
    • https://www.cmchistn.com/ என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் நெட்வொர்க் ஆஸ்பிட்டல் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.
    • காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இதுகுறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்ததாவது: ஓர் உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கவே கூடாது.

    Advertisement

    அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை, எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல, ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. இவ்வாறு கூறி காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    இந்த முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தால் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைகிறார்கள். பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் அவரவர் காப்பீட்டு பாலிசிக்கேற்ப இந்த முதல்வர் காப்பீட்டு அட்டையை குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு அனுமதிக்கிறார்கள். இதனால் ஏழைகளுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அரசு, தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது.