மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு!

  • சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், மத்திய பாஜக அரசுடன் தேவையற்ற மோதலைத் தவிர்க்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வியூகத்தின் ஒரு பகுதியாகவே, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய ஆளுங்கட்சியாக உருவெடுத்த தவிக, இதுவரை நாடாளுமன்றத்தில் எந்தவித பிரதிநிதித்துவமும் இல்லாத நிலையில் உள்ளது. இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியான ராஜ்யசபா இடத்தை நிரப்ப வரும் ஜூன் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான தவெக இந்த இடத்தை எளிதில் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தபோதும், முதல்வர் விஜய் அதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

    Advertisement

    குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தரவு பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்திக்கு இந்த சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் தவெகவுடன் கூட்டணி பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் நபராகக் கருதப்படுகிறார். இந்த முடிவின் மூலம் தவெக - காங்கிரஸ் உறவை வலுப்படுத்தவும், தேசிய அளவில் ஒரு தோழமை சக்தியை உருவாக்கவும் விஜய் முயல்வதாகக் கூறப்படுகிறது.

    விஜய் மீட்டிங்

    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மே 27ஆம் தேதி டெல்லி அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட விஜய், பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்புகள் பெரிய அளவில் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்று தெரிகிறது.

    Advertisement

    இந்தப் பின்னணியில், ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால் மத்திய அரசுக்கு எதிராக நேரடி எதிர்ப்புகளை முன்வைக்க வேண்டிய நிலை உருவாகும் என விஜய் கருதியதாகக் கூறப்படுகிறது. அத்தகைய மோதல் போக்கு, தமிழகத்திற்கான மத்திய நிதியுதவி, திட்ட ஒப்புதல்கள் உள்ளிட்டவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த வியூக ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    வரும் 2028 ஜூன் மாதம் தமிழகத்திலிருந்து மேலும் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்தத் தேர்தல் வரை மத்திய அரசுடன் சுமுக உறவைப் பேண விஜய் விரும்புவதாகத் தெரிகிறது. புதிய அரசு என்பதால், நிர்வாக ரீதியாகவும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மத்திய ஒத்துழைப்பு அவசியம் என்பதால், அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புகளை வலுப்படுத்தி, தேவையற்ற அரசியல் மோதல்களைத் தவிர்க்கும் திட்டத்தை விஜய் வகுத்துள்ளார்.

    Advertisement

    அரசியல் பார்வையாளர்கள் இதை 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்று வர்ணிக்கின்றனர். ஒருபுறம் காங்கிரஸுடன் நட்பு உறவை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய அரசியலில் தங்களுக்கு ஆதரவு சக்தியை உருவாக்கியுள்ளார் விஜய். மறுபுறம், மத்திய அரசுடன் நேரடி மோதலைத் தவிர்த்து, தமிழக நிர்வாகத்தை சீராக நடத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளார்.

    இந்த முடிவு தவிக தொண்டர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை தந்திரமான அரசியல் நகர்வு என வரவேற்க, வேறு சிலர் தங்கள் கட்சிக்கான பிரதிநிதித்துவத்தை விட்டுக் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர். எனினும், புதிய ஆட்சியின் நிலைத்தன்மைக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மத்திய ஒத்துழைப்பு முக்கியம் என்பதை உணர்ந்தே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

    Advertisement

    தமிழக அரசியல் சமன்பாடுகள் மாறும் வேளையில், முதல்வர் விஜய்யின் இந்த நகர்வு எதிர்கால அரசியல் கூட்டணிகள் மற்றும் மத்திய-மாநில உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu CM Vijay Avoids Clash with Centre: Why TVK Gave Rajya Sabha Seat to Congress