அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு! தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மேஜர் மீட்டிங்

  • சென்னை: மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

    Advertisement

    குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்து சில எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால், மேலும் சில கட்சிகளின் ஆதரவையும் பெற்று தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற உத்தேசித்துள்ளது பாஜக அரசு.

    இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் ஆக. 8- ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கின் மூன்றாம் தளத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்திருந்த நிலையில், மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 298 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 230 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்திருந்தனர். இதனால் மசோதா தோல்வியடைந்தது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தாமல் தவிர்த்து வரும் தவெக தலைமையிலான அரசு, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மேலும் விஜய், முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தற்போது முதன்முறையாக அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி கைது, திமுகவுக்கு எதிரான பேச்சுகள் என திமுக உடன் விஜய் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், விஜய் நடத்தும் இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    மக்களவையில் தமிழ்நாட்டிற்கு 22 திமுக எம்.பிக்களும், 9 காங்கிரஸ் எம்.பிக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 எம்.பிக்களும், முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக கட்சிகளுக்குத் தலா ஒரு எம்.பிகளும் உள்ளனர்.

    Advertisement

    மாநிலங்களவையில் தமிழ்நாட்டில் இருந்து திமுகவிற்கு 10 எம்.பிக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பிக்களும், அதிமுகவிற்கு 2 எம்.பிக்களும், பாமக, மதிமுக மற்றும் தேமுதிகவிற்குத் தலா ஒரு எம்.பிக்களும் உள்ளனர். தவெகவிற்கு இரு அவைகளிலும் 1 எம்.பி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay has invited MPs from all parties in the state to discuss the Union BJP government's bill amending the constituency delimitation law.