பாட்டிலுக்கு 10 ரூபா.. டாஸ்மாக் விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. பறந்தது அதிரடி உத்தரவு.. ஆட்டம் ஆரம்பம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களைத் தீவிரமாக கண்காணிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    இந்தப் புகார்களின் உண்மைத் தன்மையை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் மதுபான விற்பனையில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் திமுக ஆட்சி காலத்தில் இருந்து தற்போது தவெக ஆட்சி அமைந்த பின்பும் இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய இந்தப் பிரச்சனை சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

    பல கடைகளில் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பதாக வீடியோக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் சமுக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விஜய் தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    Advertisement

    இந்த உத்தரவின்படி, எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் இன்னும் ரூ.10 கூடுதல் வசூல் நடைபெறுகிறது என்பதை உளவுத்துறை (நுண்ணறிவுப் பிரிவு) அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட கடை எந்தப் பகுதியில் உள்ளது, எந்த ஊழியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்பது உள்ளிட்ட முழு விவரங்களுடன் உடனடி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டிஜிபி அலுவலகம் மூலமாகவும், சென்னை காவல்துறை மூலமாகவும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தற்போது உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய்-யின் தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் பிரச்சனை மிகப்பெரியதாக இருந்தது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் ஆட்சிக்கு வந்த பின்பும் 10 ரூபாய் வசூலிக்கப்படுவதால், தற்போது இந்த தொகை யாருக்கு செல்கிறது என்ற கேள்வியும் சமூக வலைத்தளத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைக் மிகுந்து கண்டிப்புடன் கையாள்வதில் விஜய் உறுதியாக உள்ளார். டாஸ்மாக் கடைகள் அரசுக்குச் சொந்தமானவை என்பதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. மக்கள் தங்கள் வரிப்பணத்தில் வாங்கும் மதுபானத்துக்கு நியாயமான விலையை மட்டுமே செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து உளவுத்துறை அளிக்கும் தகவல் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் கேட்கும் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேவேளையில் தமிழ்நாடு முழுவதும் 717 கடைகள் மூடப்படும் வேளையில், இக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணி மற்றும் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பல இடத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Chief Minister Vijay has taken strict action against alleged overcharging in TASMAC shops, directing the Intelligence Department to investigate complaints of ₹10 extra per bottle collection and submit a detailed report immediately. முதலமைச்சர் விஜய் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ₹10 கூடுதல் வசூல் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு உளவுத்துறைக்கு உடனடி அறிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளார்.