தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி! ”தங்க மோதிரம்” திட்டம்.. வீடு திரும்பும் நாளிலேயே விரலில் தங்கம்!

  • சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானது "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்". அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்து வீடு திரும்பும் அன்றே "தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

    Advertisement

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட போது மகளிரை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு திட்டமாக தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான டெண்டரும் விடப்பட்டு தற்போது இரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் டெண்டரைக் கைப்பற்றியுள்ளன. 70க்கு 30 என்ற அளவில் இவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஒரு பைசாவுக்கு இந்த டென்டரை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்றியது. செய்கூலி, சேதாரம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஒரு மோதிரத்திற்கு ஒரு பைசாவை மட்டும் இந்த நிறுவனம் கோட் செய்தது.

    Advertisement

    இதனால் தான் அந்த நிறுவனத்துக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டது. இதில் ஜி ஆர் டி, டைட்டன், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றபோதும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் அதே ஒரு பைசாவுக்கு நகைகளை செய்து தர ஒப்புக்கொண்டதால் 30 சதவீத பணிகள் அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.

    இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நேற்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும்.

    Advertisement

    இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.

    அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEMONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும்.

    Advertisement

    இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு வீடு திரும்பும் போதே தங்கமோதிரம் வழங்கப்படும்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் 28.9.2026 அன்று தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu will provide one-gram gold rings to babies born in government hospitals, with distribution beginning September 28.