சென்னை: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. தவெகவினர் உடன் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கவே அமைச்சர்களாகப் பதவியேற்றுவிட்டனர். இந்தச் சூழலில் தான் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சியினரும் அமைச்சரவையில் பதவியேற்கிறார்கள். இப்போது அமைந்துள்ள இந்த விஜய் அமைச்சரவையில் பல புதிய விஷயங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசியல் இப்போது புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே அரசியல் களமே மாறியிருக்கிறது. திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியில் அமர்ந்தது.
இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பின்பற்றி வந்த வழக்கமான அரசியல் கணக்குகளை அடியோடு மாற்றி, இளைஞர்களுக்கும், பட்டியலினத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே மிகக் குறைந்த சராசரி வயதைக் கொண்ட 'இளமையான அமைச்சரவை' இதுதான் என்ற பெருமையை விஜய் அமைச்சரவை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமுள்ள 33 அமைச்சர்களில், 11 அமைச்சர்கள் 40 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் ஆவர். புதிய சிந்தனைகளைக் கொண்ட இளைஞர்கள் மீது விஜய் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த 33 பேர் கொண்ட அமைச்சரவையில், இதற்கு முன்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஒரே ஒரு நபர் மட்டும்தான்! அதுதான் செங்கோட்டையன். அவரைத் தவிர மீதமுள்ள 32 பேரும் கோட்டைக்கு முற்றிலும் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக நீதிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இந்த புதிய அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான விசிகவும் அமைச்சரவையில் இணைந்துள்ளதாகல், இது மேலும் உயரும். சமூக நீதி வரலாற்றைக் கொண்ட முந்தைய திமுக ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக மட்டுமே இருந்தது. அதனை விஜய் அரசு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்களின் மக்கள் தொகை வெறும் 2 முதல் 3% மட்டுமே பிரமாணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். மேலும், திராவிட அரசியலே பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகவும், பகுத்தறிவை நோக்கியுமே அமைந்திருந்தது. இதனால், திராவிடச் சித்தாந்த அரசியலின்படி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பிராமண முகங்களை அமைச்சரவையில் சேர்ப்பதைத் தவிர்த்து வந்தன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவே பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், திராவிடத் தேர்தல் அரசியல் வாக்கு வங்கி காரணமாக அவரும் தனது ஆட்சிக் காலத்தில் பிராமணர்களை அமைச்சரவையில் சேர்ப்பதைத் தவிர்த்தே வந்தார். அதை மாற்றியுள்ளார். அதேநேரம் அறநிலையத் துறைக்குப் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது சர்ச்சையாகவே வெடித்துள்ளது. திராவிடக் கட்சிகள் இதைக் கடுமையாகவே கண்டித்து வருகிறார்கள். நிர்வாக அனுபவம் கொண்டவர்களா இல்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டு இருக்கிறது. இதை இரு வகையில் பார்க்கலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்! ஒரு பக்கம் மிகச் சிறப்பாக இவர்கள் பணியாற்றி அரசு அலுவலகங்கள் செயல்படும் முறை மற்றும் வேகத்தையே மாற்றி அமைக்கலாம். அல்லது அரசு நிர்வாக செயல்பாடுகளுக்கு ஏற்றபடி சட்டென மாற முடியாமல் திணறலாம். இருப்பினும் விஜய் வைத்த நம்பிக்கையை அவரது அமைச்சரவை காப்பாற்றும் என்றே அவருடைய தொண்டர்கள் கூறுகிறார்கள்.இளம் அமைச்சரவை
இரண்டு மடங்கு
பிராமணர்கள்
இரண்டு விஷயங்கள்