“உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்” - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

  • சென்னை: சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்று. இந்நிலையில், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் "உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 1980-ஆம் ஆண்டிலேயே மாநில அரசால் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    அந்தக் கடிதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவி தரத்திற்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும் என உறுதியளித்திருந்த நிலையிலும், 07.08.2007 அன்று உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இது குறித்த தனது முந்தைய தீர்மானங்களிலிருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    தென்னிந்திய மக்களுக்காக

    மேலும், பல நாடுகளில் இல்லாத சிறப்பம்சமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதற்கான முதன்மைக் காரணமும் இதுவே எனவும், நாளடைவில், பிரிவு 32-ன் கீழான தீர்வானது, புவியியல்ரீதியாக இந்திய உச்சநீதிமன்றத்திற்கு அருகில் வசிக்கக்கூடியவர்கள் மற்றும் வழக்குச் செலவுகளையும், பயணச் செலவுகளையும் பொருட்டாகக் கருதாதவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.

    இதனால், குறிப்பாகத் தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையைப் பெறும் வாய்ப்பை புதுடெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது என்பனவற்றையும் கடிதத்தில் முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை (சிவில்) எண்.36/2016 (வி.வசந்தகுமார் -எதிர்- எச்.சி.பாட்டியா மற்றும் சிலர்) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 13.07.2016 அன்று பிறப்பித்த உத்தரவில், எழுப்பப்பட்ட சட்டரீதியான கேள்விகளில், உச்சநீதிமன்றத்தின் அமர்வை அமைப்பது என்பதும் ஒன்றாகும்.

    Advertisement

    சென்னையில் உச்சநீதிமன்ற கிளை

    இது குறித்து, ஒரு உறுதியான முடிவைப் பெறுவதற்காக அரசியலமைப்பு அமர்வு ஒன்று அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், அவ்வாறே, இவ்வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, தென்னிந்திய மாநிலங்களில், சென்னையின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கை மற்றும் பின்வரும் காரணங்களைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்த இந்திய உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, "உச்சநீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது".

    Advertisement

    இக்கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் இருந்தது. இக்கோரிக்கை 1980-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு அரசால் முன்வைக்கப்பட்டது.

    தென்னிந்தியாவில் உள்ளவர்கள் நீதிசார் தீர்வுகளுக்காக புதுடெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்சநீதிமன்றக் கிளையின் தேவைகளை நிறைவு செய்யும்.

    சென்னை உயர் நீதிமன்றமானது 1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர் நீதிமன்றங்களில் ஒன்றானது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும்.

    Advertisement

    இத்தகைய கிளைகளின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்களிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Joseph Vijay has written to PM Narendra Modi, urging him to take appropriate steps toward establishing a branch of the Supreme Court in Chennai. CM Vijay has requested that the Supreme Court’s stance be reconsidered and that necessary measures be taken to achieve a favorable outcome.