தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது?

  • விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் வெளியான முக்கிய தகவல் ஒன்று, மாநிலத்தின் நிதி மேலாண்மை எந்த அளவுக்கு சவாலானதாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

    Advertisement

    மாநிலத்துக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் சுமார் 64.4 சதவீத தொகை, வட்டி, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய மூன்று கட்டாய செலவுகளுக்கே செலவிடப்படுகிறது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான அளவாக கருதப்படுகிறது.

    Advertisement

    கட்டாய செலவுகள் 64.4% ஆக உயர்வு

    நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் 64.4 சதவீதம் அதாவது 100 ரூபாய் வருவாயில் சுமார் 64.4 ரூபாய் கட்டாய செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கடன்களுக்கான வட்டி ஆகியவை அடங்கும். இந்த 3 செலவுகளையும் தவிர்க்க முடியாது என்பதால் இதை கட்டாய செலவாக அரசு கூறுகிறது.

    இந்த விகிதம் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளதாகவும் மரிய வில்சன் தெரிவித்தார். பொதுவாக ஒரு மாநிலம் தனது வருவாயில் கட்டாய செலவுகளுக்கு பெரும் பகுதியை ஒதுக்கும்போது, புதிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு போதுமான நிதி கிடைப்பது கடினமாகிறது.

    Advertisement

    வட்டி செலவு மட்டும் 22.8%

    இந்த 64.4 சதவீதத்தில் வட்டி செலவு மட்டும் 22.8 சதவீதமாக உள்ளது. அதாவது, மாநிலத்துக்கு கிடைக்கும் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயில் 22.80 ரூபாய் வட்டி செலுத்துவதற்கே போய்விடுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    அதிகப்படியான கடன் சுமை இருக்கும் காரணத்தால் இதற்காக வட்டி செலவும் அதிகரிக்கிறது. கடன் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கான வட்டியை தொடர்ந்து செலுத்த வேண்டிய கட்டாயம், அரசின் நிதி நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது.

    இதன் பொருள் என்ன?

    வருவாயில் 64.4 சதவீதம் கட்டாய செலவுகளுக்கே போய்விடுவதால், மீதமுள்ள 35.6 சதவீதம் மட்டுமே பிற செலவுகளுக்கு கிடைக்கிறது. இதில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்கள் மற்றும் புதிய முதலீட்டு திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிலை தொடர்ந்தால், அரசு புதிய திட்டங்களை தொடங்குவதும், இருக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதும் கடினமாக மாறும்.

    Advertisement

    மேலும், வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழலில், கட்டாய செலவுகள் இந்த அளவுக்கு உயர்வது மாநிலத்தின் நிதி மேலாண்மைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதனால் அரசு மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அச்சம் உள்ளது.

    இந்த வெள்ளை அறிக்கை, தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து தெளிவான படத்தை வழங்கியுள்ளது. கட்டாய செலவுகளின் அளவை கட்டுப்படுத்துவதும், சொந்த வருவாயை அதிகரிப்பதும் எதிர்காலத்தில் மாநிலத்தின் முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu spends 64.4% of its total revenue receipts on committed expenditure, including interest payments, salaries, and pensions, according to the white paper released by Finance Minister Mariya Wilson. With interest alone consuming 22.8%, only 35.6% remains for development schemes, infrastructure, and welfare programs.