அடுத்த டார்கெட்..? மாணிக்கம் தாகூர் தலைமையில் நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

  • சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், அமைச்சர் ராஜேஷ்குமார் முன்னிலையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

    Advertisement

    சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வந்ததுமே, காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக கூட்டணியில் இணைந்தது. தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டன. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி புதிய மாநிலத் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் பதவியேற்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    அப்போது மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சி அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் தங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு பணிகளை செய்ய வேண்டும். யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை அடித்தால், நான் திருப்பி அடிப்பேன். காங்கிரசை தொட்டால் அது யாராக இருந்தாலும் திருப்பி அடிப்போம் எனப் பேசியிருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்தச் சூழலில் புதிய மாநில தலைவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Tamil Nadu Congress Executive Committee meeting is scheduled to be held tomorrow at Sathyamurthy Bhavan. The meeting will take place under the leadership of Tamil Nadu Congress Committee President Manickam Tagore.