ஸ்டாலினின் TAPS திட்டம் வேண்டாம்! தமிழ்நாட்டில் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டம்! CPS முக்கிய முடிவு

  • சென்னை: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) முழுமையாக ஒழித்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

    Advertisement

    சென்னையில் நடைபெற்ற அவசர மாநில மையக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.பிரடெரிக் எங்கெல்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

    Advertisement

    கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பி.பிரடெரிக் எங்கெல்ஸ், முந்தைய திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "கடந்த திமுக ஆட்சியின் போது, தேர்தல் அறிக்கையில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம்' என்று உறுதியான வாக்குறுதி அளித்து லட்சக்கணக்கான ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மோசடி செய்தனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    சில சுயநல சக்திகளின் தவறான ஆலோசனையின் அடிப்படையில் முந்தைய ஆட்சியாளர்கள் செயல்பட்டதாகவும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உணர்வுகளை திட்டமிட்டு புறக்கணித்ததாகவும் அவர் கூறினார். "தங்களை நம்பிய மக்களின் உணர்வுகளை மதிக்காத அந்த ஆட்சியாளர்களுக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் வாக்கு வலிமையின் மூலம் தகுந்த பாடம் புகட்டினர். அதன் விளைவாகவே அவர்களின் ஆட்சி வீழ்ந்தது" என்று காரசாரமாகத் தெரிவித்தார்.

    Advertisement

    மறுபுறம், புதிய தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டியது. "பழைய ஓய்வூதியத் திட்டத்தை எவ்வித நிபந்தனையுமின்றி அமல்படுத்துவோம் என்று தெளிவாக அறிவித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு லட்சோப லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முழு ஆதரவை வழங்கினர். அந்த இமாலய ஆதரவின் பலனாக தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    எனினும், புதிய அரசிடம் தங்களது எதிர்பார்ப்பு மிக அதிகம் இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். "பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களின் ஆடம்பரக் கோரிக்கை அல்ல, அது அவர்களின் முதுமைக் காலப் பாதுகாப்பு. முந்தைய அரசு செய்த தவறுகளைப் புதிய அரசு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் CPS திட்டத்தை ஒழித்து OPS திட்டத்தை உடனடியாக அரசாணையாக வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

    திமுக அரசு அமைத்த கமிட்டிகளைப் போல காலம் கடத்தாமல், லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Advertisement

    இந்தக் கூட்டத்தின் முடிவுகள் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசு தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு எடுக்கும் முதல் முக்கிய முடிவுகளில் ஒன்றாக OPS மீட்டெடுப்பு இருக்குமா என்பதை நாடே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

    English Summary

    Tamil Nadu CPS Abolition Movement Demands Immediate Old Pension Scheme Restoration- Strong Warning to CM Vijay