அரசு செலவில் படித்தும் பணிக்கு வராத 1420 டாக்டர்ஸ்..680 பேர் மீது பாய்ந்த ஆக்‌ஷன்! தமிழக அரசு அதிரடி

  • சென்னை: அரசு சேவை ஒதுக்கீட்டின் கீழ் பட்டமேற்படிப்பு முடித்தும், அரசுப் பணிக்கு திரும்பாமல் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியதாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பணிக்கு வராமல் இருந்த 1,420 மருத்துவர்களில், 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 740 பேர் மீதான நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, சேவை ஒதுக்கீட்டு முறையின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    Advertisement

    இந்தத் திட்டத்தின் நோக்கம், உயர் கல்வி பெற்ற மருத்துவர்கள் மீண்டும் அரசுப் பணியில் இணைந்து, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ் பட்டமேற்படிப்பு முடிக்கும் மருத்துவர்கள், அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் அரசுப் பணியில் தொடர வேண்டியது கட்டாயமாகும்.

    அரசு மருத்துவர்கள்

    அதனை மீறி பணியில் சேராமல் இருந்தால், ஒழுங்கு நடவடிக்கையுடன், ரூ.40 லட்சம் பிணையத் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய விதியும் நடைமுறையில் உள்ளது. ஆனால், சமீப காலமாக சேவை ஒதுக்கீட்டில் படித்த பல மருத்துவர்கள் எந்தவித முன்அறிவிப்பும் அளிக்காமல் அரசுப் பணிக்கு வராமல் இருப்பதாகவும், அவர்களில் பலர் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    Advertisement

    அறப்போர் இயக்கம்

    இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் தமிழக அரசிடம் புகார் அளித்து, விதிமுறைகளை மீறும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சேவை ஒதுக்கீட்டில் பட்டமேற்படிப்பு முடித்த சில மருத்துவர்கள், எந்தவித முன்அறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அவர்கள் மீண்டும் அரசுப் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவர்கள்

    அறிவுறுத்தலையும் மீறி பணியில் சேராத மருத்துவர்கள் மீது அரசு விதிகளின்படி '17(பி)' ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தேவையெனில் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் பிணையத் தொகையையும், அதற்கான வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    1,420 மருத்துவர்கள்

    அரசின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மொத்தம் 1,420 மருத்துவர்கள் தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 740 பேரின் வழக்குகளும் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சேவை ஒதுக்கீட்டு திட்டத்தின் நோக்கமே அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை குறைப்பதாகும்.

    ஒழுங்கு நடவடிக்கை

    அரசு செலவில் உயர்கல்வி பெற்ற மருத்துவர்கள் ஒப்பந்த விதிகளை மீறி தனியார் துறைக்கு செல்வதால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதோடு, கிராமப்புற மற்றும் அரசு மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படுகின்றன என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, அரசு செலவில் படித்தும் ஒப்பந்த விதிகளை மீறும் மருத்துவர்கள் மீது இனி சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும், அரசு விதிகளை யாரும் மீற முடியாது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English Summary

    Tamil Nadu initiates disciplinary action against 1,420 doctors accused of skipping mandatory government service after postgraduate studies.