சென்னை: பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியலை, தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாககுறுதி அளித்திருந்தது தவெக.
தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க்கடன் பெற்ற, 14.43 லட்சம் விவசாயிகளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது. ரூபாய் 50,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்த குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார். அனைவருக்கும் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை, அதாவது ரூ. 75,000க்குள் கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000-ம் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 8,33,773 குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.3,599.67 கோடி. 5,16,183 சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1,995.42 கோடி. 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.337.15 கோடி. மொத்தம் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி. மாவட்ட வாரியாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள், அவர்களின் தள்ளுபடி தொகை விபரம் ஆகியவை, www.kooturavu.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள வி.ஏ.ஓ அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில், பயிர்க் கடன் தள்ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் பெற்றிருந்த விவசாயிகள், தங்களது பெயர், கடன் விவரம் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளலாம். பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி தங்களது கடன் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.