நல்லவேளை கொரோனா டைமில் விஜய் ஆட்சி இல்லை.. டெங்கு பரவல்.. கடுமையாக சொதப்பும் தவெக அரசு

  • சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் 200 முதல் 250 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,500-ஐத் தாண்டியுள்ளது. இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

    Advertisement

    மழைக்காலம் தொடங்கும் முன்பே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், ஆளும் தவெக அரசு காட்டிய அலட்சியமே இந்த திடீர் நோய்ப் பரவலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் பொதுமக்கள் மற்றும் அரசியல் களத்தில் வலுத்து வருகிறது.

    களப்பணியில் சுணக்கம்: தடுமாறும் நிர்வாகம்

    பொதுவாக மழைக்காலங்களில் கொசு உற்பத்தி அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், நீர் தேங்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அழிப்பது, சாக்கடைகளைத் தூர்வாருவது, தீவிர கொசு மருந்து அடிப்பது போன்ற அடிப்படைப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் தவெக அரசு பின்தங்கியுள்ளது.

    Advertisement

    தற்போது களத்தில் 25,000-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இறக்கப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், பல பகுதிகளில் இன்னும் கொசு மருந்து தெளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் அமைப்பது போன்ற பின்விளைவு நடவடிக்கைகளை விட, நோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் களப்பணிகளில் நிர்வாக அனுபவமின்மை அப்பட்டமாகத் தெரிகிறது.

    திமுக ஆட்சியின் கொரோனா கால நிர்வாகத்துடன் ஒப்பீடு

    திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்த கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அரசு எடுத்த உடனடி கள நடவடிக்கைகள், தீவிர மருத்துவக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் ஆகியவை நோய்த்தொற்றை மிகக் குறுகிய காலத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தன.

    Advertisement

    அந்த அனுபவம் வாய்ந்த நிர்வாக அணுகுமுறை இப்போது இல்லாததே டெங்கு பாதிப்பு இவ்வளவு தூரம் அதிகரிக்கக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கொரோனா காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. அதை திமுக மிக சிறப்பாக எதிர்கொண்டது. ஆனால் கொரோனாவை விட எளிதாகக் கையாளக்கூடிய பருவக்கால டெங்கு காய்ச்சலையே கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தவெக, ஒருவேளை அந்தப் பெருந்தொற்று காலத்தில் ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும் என்ற விவாதங்களும் எழுகின்றன.

    மக்கள் எதிர்பார்ப்பும் உடனடித் தேவைகளும்

    சுகாதாரத்துறை இது வழக்கமான பருவக்காலக் காய்ச்சல்தான் என்று கூறி சமாதானப்படுத்த முயன்றாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் குறைந்தபாடில்லை.

    Advertisement

    அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரையும் குப்பைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
    கொசு மருந்து தெளிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
    ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோறும் போதுமான ரத்தப் பரிசோதனை வசதிகளையும் மருந்துகளையும் உறுதி செய்ய வேண்டும்.

    அரசு விளம்பரங்களை மட்டுமே நம்பாமல், போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் உடனடி கோரிக்கையாக உள்ளது.

    English Summary

    Tamil Nadu Dengue Outbreak: TVK Govt Under Fire as Cases Cross 16,500 Mark