சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 700 உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின் வாரியத்தில் 2012-ல் பணியில் சேர்ந்தோருக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு இந்த பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தவுடன் மின் வாரியத்தில் ஒரே சமயத்தில் 300 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வு பட்டியல் கடந்த திமுக ஆட்சியிலேயே தயார் செய்யப்பட்டது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2வது கட்டமாக உதவி பொறியாளர்களுக்கு தற்போது பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 700 பேர் பதவி உயர்வை பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காலியாக இருக்கும் உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை ஒதுக்கப்படுகிறது. மேலும், பதவி உயர்வு பெற்றவர்கள் அவர்கள் விரும்பும் இடங்களில் பணிகளை ஒதுக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், இதற்கான கோப்புகளில் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கையெழுத்திடுவார் என்றும், பதவி உயர்வு ஆணைகளை முதலமைச்சர் விஜய் கையால் வழங்கும் வகையில் விழாவை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 200 உதவி செயற்பொறியாளர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கேட்ட இடத்திற்கு விருப்பு இட மாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் முறையில் வழங்கப்பட்ட இந்த பணியிட மாற்றம் கோருபவர்களிடம் 3 இடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதில் காலியாக இருக்கும் இடத்திற்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வெளிப்படைத்தன்மையுடன், எந்தவித சிபாரிசுகளும் இன்றி நேர்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அதிகாரிகள் விருப்பம் தெரிவித்த இடங்களில் காலியிடம் இருந்தால் வழங்கும் விதியின்படி, இந்த பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.