ராஜ்யசபா இடைத்தேர்தல்.. சிவி சண்முகம் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்தை நிரப்ப ஜூன் 18ல் தேர்தல்!

  • சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட காலிப் பணியிடத்தை நிரப்ப இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

    Advertisement

    தேர்தல் கால அட்டவணை:

    மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகளைத் தேர்தல் ஆணையம் பின்வருமாறு அறிவித்துள்ளது:

    வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஜூன் 1, 2026

    வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஜூன் 8, 2026

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: ஜூன் 9, 2026

    மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜூன் 11, 2026

    வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை: ஜூன் 18, 2026

    2028 வரை பதவிக்காலம்

    பொதுவாக மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். ஆனால், இது இடைத்தேர்தல் என்பதால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய உறுப்பினருக்கு, சி.வி.சண்முகத்தின் மீதமுள்ள பதவிக்காலமான 2028 ஜூன் 29 வரை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க வாய்ப்பு இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Advertisement

    மயிலம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் சி.வி.சண்முகம் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த பதவிக்காலம் 2028 வரை இருப்பதால், தற்போது அதற்கான இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது.

    அரசியல் களம் விறுவிறு

    தமிழகத்தில் சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின்எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தத் தேர்தல் நடக்கும் என்பதால், தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணிகள் தங்கள் வேட்பாளரை நிறுத்த இப்போதே ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டன.

    இதேபோல, மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தனது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநில அரசியலில் களமிறங்கிய நிலையில், அவரது ராஜினாமாவால் ஏற்பட்ட ராஜ்யசபா காலி இடத்துக்கும் ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    English Summary

    Election Commission of India has officially announced that a by-election for a vacant Rajya Sabha seat in Tamil Nadu will be held on June 1st. With the filing of nominations set to begin on June 1st, the political arena in Tamil Nadu has once again begun to heat up.