சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சரண்யா அரி விருதுநகருக்கும், பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ரஷீத், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். ஆட்சி அமைத்த புதிதில் இருந்து தமிழக முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதுவரை 3 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," நிதித்துறையில் அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த ராஜா கோபால் சுங்கரா, சுற்றுலாத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த டி. மோகன் ஐஏஎஸ், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த ஆன் மேரி ஸ்வர்ணா ஐஏஎஸ், விருப்ப ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும் இருந்த டாக்டர் வி.பி. ஜெயசீலன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக பணியாற்றி வந்த ஷ்ரேயா பி. சிங் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையர் பதவிக்கு, கோவை வணிகவரித்துறையின் மாநில வரி இணை ஆணையராக இருந்த தாகரே சுபம் ஞானதேவராவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஷரண்யா அரி ஐஏஎஸ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொன்னேரி கோட்டாட்சியராக இருந்த எஃப்.அப்துல் ரஸீக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், செங்கல்பட்டு கோட்டாட்சியராக பணியாற்றி வந்த நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி. ரவிக்குமார், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசின் இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், உதகமண்டலத்தில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த கே. சங்கீதா, கோவை வணிகவரித்துறையின் மாநில வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அந்தப் பதவியில் இருந்த தாகரே சுபம் ஞானதேவராவ் ஐஏஎஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வீர் பிரதாப் சிங் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலும், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த என். பொன்மணி, திருச்சி மாநகராட்சியின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பல்வேறு துறைகளில் செயலாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா, வருவாய் நிர்வாக துறை ஆணையராக சந்திரமோகன், உணவுப் பொருள் வளங்கள் நுகர்வோர் துறையின் ஆணையராக அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் பால்வளத் துறையின் இயக்குனராக சிவராசு, சிறு தொழில் வளர்ச்சி கழகத் தலைவராக முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.