விஜய்யின் தவெக கட்சி கொடி நிறத்தில் தமிழக அரசு பேருந்துகள்? எழுந்த கடும் விமர்சனம்!

  • சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி நிறத்திலேயே தமிழக அரசு பேருந்துகளுக்கு வர்ணம் பூசப்பட்டு தயார் செய்யப்படுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்காக புதிதாக பாடி கட்டப்பட்டு தயாராகி வரும் தமிழக அரசின் பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வர்ணம் பூசப்படுவதாக விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement

    தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக போக்குவரத்து துறையில் இனி ஏசி பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமல் விளம்பரங்களின் மூலம் வருவாயை உயர்த்துவது தொடர்பாகவும் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தவெக கொடி நிறத்தில் அரசு பஸ் வர்ணப்பூச்சு

    போக்குவரத்து கழகத்தில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க தவெக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் புதிய பேருந்துகள் பாடி கட்டப்படும் பணிகள் நடைபெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

    ஏனெனில் இந்த பேருந்துகளின் வெளிப்புற வண்ணம் தவெக கொடி நிறம் போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி நிறமான மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் பேருந்துகளுக்கு வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    நெட்டிசன்கள் வாதம்

    மக்கள் வரிப்பணத்தில் கட்சி விளம்பரம் செய்வதா? என நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனத்தை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். அதேநேரத்தில் இது தவெக கொடி நிறம் இல்லை எனவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுக்கு இதே போல கலர் பூசப்பட்டு இருப்பதாகவும், மற்றொரு தரப்பினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.

    இணையத்தில் வைரலாகும் அந்த படத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என்ற ஸ்டிக்கரும் இடம் பெற்றுள்ளது. இதனால், சென்னை எம்.டி.சிக்காக இந்த பேருந்துகள் தயாராகி வருவதாக பலரும் கூறி வருகிறார்கள். எனினும், இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    Advertisement

    திட்டங்களின் பெயர் மாற்றம்

    தவெக ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. திமுக அட்சியில் செய்த நல்ல திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்து இருந்தார். திமுகவின் திட்டங்கள் தொடர்ந்தாலும் திட்டத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்புகளை திமுகவினர் முன்வைத்து வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை திறன் தமிழ்நாடு என தவெக அரசு பெயர் மாற்றம் செய்தது.

    இதற்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல, கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் விடியல் பயணம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. மகளிர் இந்த பேருந்துகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்வதற்காக பேருந்துகளின் டிஜிட்டல் போர்டுகளிலும் விடியல் பயணம் என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. ரூட் போர்டுகளில் இந்த வாசகம் இடையிடையே ஓடிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக விடியல் பயணம் என்பதை மகளிர் பயணம் என தவெக அரசு மாற்றியது.

    English Summary

    Tamil Nadu government bus colors of Vijay TVK party flag: A photograph showing Tamil Nadu government buses being painted in the same colors as the flag of Vijay's party, Tamizhaga Vettri Kazhagam, has surfaced online and is spreading rapidly. The move has drawn criticism, as it is reported that these buses are being prepared for the Chennai Metropolitan Transport Corporation.