சென்னை: கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திமுக அரசு தீவிரமாக செயல்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது பரந்தூர் அருகே புதிய செமிகண்டக்டர் உற்பத்திக்காக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தயாராகி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையின் 2வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முந்தைய திமுக அரசு தீவிரம் காட்டியது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனறு தொடர்ந்து பரந்தூர், ஏகனாபுரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் திமுக அரசு செவிசாய்க்கவில்லை. இதற்காக 80 முதல் 90 சதவீதம் நிலம் வரை கையகப்படுத்தப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வளவு நிலம் கையகப்படுத்தவில்லை. பாதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை சமீபத்தில் கைவிடுவதாக அறிவித்தது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். இந்த அறிவிப்புக்கு நடுவே தான் தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிதாக நிலம் கையகப்படுத்துவதற்கான பணிக்கு தயாராகி வருகிறது. அதாவது பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்க நாடு முழுவதும் பெரிய அளவில் போட்டி உள்ளது. இதனால் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி செலவில் சிப்காட் தொழிற்பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்து. இதற்கான நில கையகப்படுத்தும் பணிக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்ட அறிவிப்பில், ''தொழில் பயன்பாட்டிற்காக சுமார் 8.3820 எக்டர் நிலம் தேவைப்படுகிறது. கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் 'புன்செய்' (மானாவாரி) நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வேம்பு, தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலங்களின் வரைபடங்கள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அலுவலக நேரத்தில் எந்த நாளிலும் அவற்றை நேரில் பார்வையிடலாம்'' என கூறியுள்ளார். சமீபத்தில் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு முக்கிய அறுிவிப்புகளை வெளியிட்டார். அதில் மதுரமங்கலத்தில் தொழில்பூங்கா அமைத்து செமிகண்டக்டர் தொழில்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தான் தற்போது அங்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறைக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.