சென்னை: இரவில் ஓய்வில் இருக்கும் மருத்துவரை துன்புறுத்தலாமா? என ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் விடுத்த கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்குக்குடி ஏரல் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக எம்எல்ஏ சரவணன் ஓய்வில் இருந்த மருத்துவரை எழுப்பி கேள்வி கேட்டுள்ளார்.
இரவு பணியில் இருக்கும் மருத்துவர்கள், நோயாளிகள் இல்லை எனும் போது ஓய்வில் இருக்க அனுமதி உள்ளது. நோயாளிகள் இல்லாத போது ஓய்வில் இருக்கும் மருத்துவரை எழுப்பி தவெக எம்எல்ஏ சரவணன் துன்புறுத்தியுள்ளார். அரசாங்க நடைமுறையை தெரியாமல் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்று மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தியுள்ளார். எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் நிலை உள்ளது. மருத்துவர்கள் நாற்காலியில் உட்கார வேண்டும் என்ற அவசியம் இல்லை. மருத்துவர்களுக்கென தனி அறை இருக்கிறது. நோயாளிகள் இருந்து மருத்துவர்கள் தூங்கினால்தான் தவறு. நோயாளிகள் இல்லாமல் மருத்துவர் சென்று ஓய்வு எடுக்கலாம். காலை 7.30 முதல் மறுநாள் 7.30 மணி வரை மருத்துவர்களுக்கு பணி உள்ளது. மருத்துவர்களுக்கு மட்டும் ஷிப்ட் என்ற வசதி இல்லை. ஆனால் செவிலியர்களுக்கு ஷிப்ட் பணி உள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவரை தவிர அனைவரும் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். தங்களுக்கும் ஷிப்ட் அடிப்படையில் பணி வேண்டும் என பல முறை தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் இந்த கோரிக்கையை அரசு செவி சாய்க்கவில்லை. மருத்துவர்களின் இந்த நிலைக்கு காரணம் காலி பணியிடங்களை நிரப்பாததுதான். கிராமப்புற மருத்துவமனைகளில் ஒரே ஒரு மருத்துவர் இருப்பார். அவர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி கிடையாது. எனவே 5000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டும இது போல் அரசு மருத்துவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு தீர்வாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் நள்ளிரவில் ஆய்வு நடத்தினார். அங்கு மருத்துவர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை செவிலியரின் செல்போன் மூலம் வெளியே வரவழைத்து நோயாளிகளை நன்கு கவனியுங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு சென்றார். தவெக எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார் வெளியிட்ட கண்டன பதிவில், "கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இரவுப் பணியில் உள்ள மருத்துவரின் பணி மற்றும் பொறுப்புகளில் டி.வி.கே எம்.எல்.ஏ தலையிட்டது முற்றிலும் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசியல் தலையீட்டிற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பிற மருத்துவர் சங்கங்கள் வலுவான அறிக்கையை வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவர் முகமது ஹக்கீம் என்பவர் கண்டன பதிவில் இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. மருத்துவர்கள், செவிலியர்களின் கண்ணியத்தையும் அவர்களின் பணிச் சூழலையும் சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. மருத்துவமனையில் இரவில் நோயாளி இல்லாத நேரத்தில் அல்லது அவசர சிகிச்சைகள் கொடுக்கப்படாத சூழலில் பணிக்காக ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு மருத்துவர் சிறிது நேரம் ஓய்வெடுப்பது குற்றமோ அல்லது கடமைத் தவறலோ இல்லை. மருத்துவர் என்பவர் 24 மணி நேரமும் கண்விழித்துக் கொண்டிருக்கும் நைட் வாட்ச்மேன் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்களின் முகங்களை ஏன் படம் பிடித்து சமூகவலைதளங்களில் போட வேண்டும். மருத்துவர்களும் செவிலியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, அழுத்தங்கள் இருக்கின்றன. உண்மையான புறக்கணிப்புகளை கேள்வி கேளுங்கள். ஆனால் மருத்துவ ஊழியர்களை சோசியல் மீடியா கன்டென்ட்டாக்க வேண்டாம். இவ்வாறு கண்டித்துள்ளார்.