வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை விதித்தது ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

  • மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் ஜல்லிக்கற்கள், மணல், எம்-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அண்மையில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை விதித்ததை எதிர்த்து லிபின் பொன்னுசாமி லீலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை விதித்தது ஏன் என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உ தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், நான் கனரக வாகனங்களை வைத்து தொழில் செய்து வருகிறேன். ஜல்லிக்கற்கள், மணல், எம்-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் கொண்டு செல்கிறோம். இந்த நிலையில் பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் எங்கள் தொழில் கடுமையாக பாதித்து உள்ளது. எனவே இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, தடை விதித்தற்கான காரணம் குறித்து ஆஜராகி வாதிடுகையில், "தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்து அவை வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் கடத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மணல், எம்.சாண்ட், கற்கள் போன்றவற்றுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

    இதன்மூலம் இந்த பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

    Advertisement

    தொடர்ந்து மனுதாரர் லிபின் பொன்னுசாமி லீலா சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, மனுதாரர் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்குபவர்கள் குவாரிகளில் இருந்து கனிமங்களை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்வதற்கு டெண்டர் பெற்று உள்ளாரக்ள். ஆனால் தமிழ்நாடு அரசு திடீரென வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை ஏற்றி செல்வதற்கு தடை விதித்து உள்ளது முறையாக உரிமம் பெற்ற குவாரிகளில் இருந்துதான் கனிமங்களை மனுதாரரின் வாகனங்களில் பிற மாநிலத்துக்கு கொண்டு செல்கிறார்கள்

    இதில் எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் அரசாணை பிறப்பித்து இருப்பது ஏற்புடையது கிடையாது. பிற மாநிலங்களில் இதுபோல தடை விதித்ததை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

    Advertisement

    அப்போது நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், மனுதாரர் கனரக லாரிகளை வைத்து தொழில் செய்பவர். ஆனால் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தவில்லை என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? மேலும் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் விவகாரத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்கள். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 10-ந்தேதி மாலை 3.30 மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்குள் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    English Summary

    Lipin Ponnusamy Leela filed a case in the Madurai Bench of the Madras High Court challenging the ban on transporting minerals to other states. In response, the Tamil Nadu government provided an explanation for imposing the ban.