சொதப்பிய தவெக..குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடா? இதுதான் மாற்றமா சி.எம் சார்?

  • சென்னை: மாதம் முடிவதற்கு முன்பே பிறக்கும் குறை பிரசவக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவும் மிக முக்கியமான 'சர்ஃபாக்டன்ட்' மருந்துக்கு, தமிழகத்தின் பல அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவி வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், மருந்துகள் உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    'சர்ஃபாக்டன்ட்' மருந்து ஏன் பச்சிளங் குழந்தைகளுக்கு இவ்வளவு முக்கியம்?

    பொதுவாக ஒரு தாய் 34 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும்போதுதான், கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி அடையும். அதாவது, குழந்தை பிறந்தவுடன் காற்றில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்கத் தேவையான அளவுக்கு அதன் காற்றுப் பைகள் தயாராகிவிடும்.

    Advertisement

    ஆனால், 7 அல்லது 8 மாதங்களிலேயே முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முழுமை பெற்றிருக்காது. நுரையீரலில் இருக்கும் மிகச்சிறிய காற்றுப் பைகள் சுருங்கிப் போய் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் விரிந்து இருக்க 'சர்ஃபாக்டன்ட்' என்ற திரவம் அவசியம். முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திரவம் இயற்கையாக சுரக்காது. இதனால் குழந்தைக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும்.

    அத்தகைய இக்கட்டான நேரத்தில், மருத்துவர்கள் செயற்கை சுவாசக் குழாய் வழியாக இந்த 'சர்ஃபாக்டன்ட்' மருந்தை நேரடியாகக் குழந்தையின் நுரையீரலுக்குள் செலுத்துவார்கள். அப்போதுதான் குழந்தையின் நுரையீரல் விரிந்து, சுவாசிக்க முடியும். இந்த மருந்து சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், மூளை மற்றும் கண்களுக்குப் போகும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    Advertisement

    மருத்துவமனைகளில் என்ன சிக்கல்?

    கடந்த சில மாதங்களாகவே சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    சில மருத்துவமனைகளில் மருந்துகளின் வரத்து நின்றதாலும், பிறக்கும் குறை பிரசவக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் இந்த பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகளைக் காப்பாற்ற, சில நேரங்களில் மருத்துவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் அல்லது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருந்துகளைக் கடன் வாங்கிச் சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    Advertisement

    அரசுத் தரப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம்

    இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருந்து கொள்முதலில் எந்தவிதப் பொதுவான தடையோ தாமதமோ ஏற்படவில்லை என்றும், சில மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான அளவைக் கணிப்பதில் ஏற்பட்ட மாறுதல்களே சில இடங்களில் பற்றாக்குறைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சுமார் ₹9 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் அனைத்து மையங்களுக்கும் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    அரசு மருத்துவமனைகளில் நிதி இருப்பு போதுமான அளவு உள்ளதாகவும், அவசரத் தேவை ஏற்படும்போது உள்ளூரிலேயே நேரடியாக மருந்துகளை வாங்கிக் கொள்ள மருத்துவக் கல்லூரி டீன்களுக்கும் மருத்துவர்களுக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறை பிரசவக் குழந்தையும் மருந்து பற்றாக்குறையால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    English Summary

    Tamil Nadu Government Hospitals Face Surfactant Medicine Shortage for Pre-Term Babies: What Is the Truth?