சென்னை: சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்து தவெக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஐடியா சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்பெல்லாம் சென்னை பூக்கடையில்தான் புறநகர் பேருந்து நிறுத்தமானது இருந்தது. ஆனால் அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. 36 ஏக்கர் பரப்பளவில் 103 கோடி ரூபாய் செலவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து புதுவை, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் வடக்கு, மேற்கு, தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அது போல் சென்னையில் இருந்து மாநகர பேருந்துகளும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செஹ்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட நாட்களில் கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தை விட்டு பேருந்துகள் மதுரவாயல் வரை வருவதற்கே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் முந்தைய அரசுகள் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து பேருந்துகளை இயக்கி வந்தன. இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலினால் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் இங்கிருந்துதான் ஆம்னி, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆரணி, வேலூர், ஓசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த கோயம்பேடு பஸ் நிலையத்தில் வணிக வளாகம், பன்னோக்கு மையம், கட்ட சிஎம்டிஏ மூலம் திட்டமிட்டது. ஆனால் இதற்கும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஒவ்வொரு முறையும் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் சென்று அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அது போல் மீண்டும் வீட்டிற்கு வர இதே முறை பயன்படுத்த வேண்டியிருப்பதால் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை பழைய மாதிரியே கோயம்பேட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு வணிக வளாகத்திற்கு மாற்றாக புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறதாம். இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், தலைமைச் செயலகத்திலும் தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள், பணியாளர்களின் வாகனங்களை கூட நிறுத்த இடமில்லாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலால் தலைமைச் செயலகத்திற்கு செல்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் தலைமைச் செயலகம் கட்டலாம் என முதல்வர் விஜய்யிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனராம். கோயம்பேடு அருகே விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் வசித்து வருவதால் கோயம்பேடு வந்து செல்வதில் எந்த தாமதமும் ஏற்படாது என்கிறார்கள். முதல்வர் விஜய் அனுமதி அளித்தால் இதுகுறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் இதற்காக ரூ 300 கோடிக்கு மேல் ஒதுக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லாம் சரி கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது? முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஓமந்தூரார் எஸ்டேட்டை தலைமைச் செயலகமாக்க திட்டமிட்டு கட்டப்பட்டது. ஆனால் அது கட்டி முடிப்பதற்குள் அதிமுக ஆட்சி மாறிய நிலையில் அந்த கட்டடத்தை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். இன்று அந்த மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.