சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக சட்டசபை கட்ட முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த எதிர்ப்பு குரலால் பட்டினம்பாக்கத்தை கைவிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக இசிஆர் எனும் கிழக்கு கடற்கரைச் சாலையில் மாற்று இடத்தை ஆய்வு செய்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக சட்டசபை மற்றும் தமிழக தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் புதிய இடத்தில் தமிழக தலைமை செயலகம் மற்றும் தமிழக சட்டசபையை அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவெடுத்தது. அதன்படி தலைமை செயலகத்துடன் சட்டசபை கட்டடம் கட்ட தமிழக அரசு கொள்கை அளவில் இந்த மாதம் முதலில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை ஆலோசகர், வடிவமைப்புகளை இறுதி செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த புதிய சட்டசபை அமையும் இடம் விஜய்யின் வீட்டில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் மட்டுமே அமைந்துள்ளது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் தனது வீட்டின் அருகே சட்டசபையை அமைப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி 9 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த புதிய சட்டசபை கட்டடம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மீனவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி தவெக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிகள், விசிகவும் இந்த பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டசபைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டதை கேள்விக்குள்ளாக்கின. பட்டினப்பாக்கத்துக்கு பதில் புதிய இடத்தை தேர்வு செய்ய பரிந்துரை செய்தனர். இந்நிலையில் தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் - சட்டசபை கட்டடம் அமைப்பதில் இருந்து தமிழக அரசு பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த 17 ம் தேதி லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் விஜய் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை அமைப்பது பற்றியும், அதற்கு கிளம்பி வரும் எதிர்ப்பு பற்றியும் விவாதித்தார். இதையடுத்து தான் முதல்வர் விஜய் புதிய சட்டசபையை பட்டினப்பாக்கத்தில் இருந்து மாற்ற முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பட்டினப்பாக்கத்துக்கு பதில் சென்னை இசிஆர் எனும் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய இடத்தை தேர்வு செய்வதற்கான ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாகவில்லை. செப்டம்பர் 21ம் தேதிக்குள் பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டசபை கட்டடம் வராது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று மீனவர்கள் கெடு விடுத்துள்ளனர். இந்த கெடு நாளை முடிவுக்கு வர உள்ளது. இதனால் நாளை அல்லது அடுத்த சில நாட்களுக்கும் தவெக அரசு சார்பில் பட்டினப்பாக்கத்திற்கு பதில் வேறு இடத்தில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டசபை கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.