அடுத்த மாற்றம்.. அரசு மாதிரிப் பள்ளிகளை வெற்றிப் பள்ளிகள் என்று மாற்றிய தவெக அரசு.. பின்னணி என்ன?

  • சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர் வெற்றிப் பள்ளிகள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகளிர் விடியல் பேருந்து திட்டத்தை வெற்றி பேருந்து திட்டம் என்றும், நான் முதல்வன் திட்டத்தை திறன் தமிழ்நாடு என்றும் மாற்றிய நிலையில், தற்போது மாதிரிப் பள்ளிகளை வெற்றிப் பள்ளிகள் என்று மாற்றி இருக்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை தொடர்ச்சியாக மாற்றி வருகிறது. நான் முதல்வன், விடியல் பேருந்து திட்டம், முதல்வர் படைப்பகம், முதலமைச்சார் காலை உணவுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்டவற்றின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வரிசையில் திமுக ஆட்சியில் 2021 - 2022 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட மாதிரி பள்ளிகள் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி, உணவு மற்றும் உறைவிடம் அனைத்தும் உள்ளடக்கிய இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தலா ஒரு மாதிரிப் பள்ளி தொடங்கப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, கணினி மற்றும் இணையதள வசதி, அனைத்து உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம், நுண்கலைத்திறன் பயிற்சி, விளையாட்டு மைதானம், உணவு மற்றும் தங்குமிடம் என்று அனைத்து வகையான வசதியும் இந்த மாதிரி பள்ளிகளில் கொண்டு வரப்பட்டிருந்தன.

    Advertisement
    முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இலவச வேட்டி, சேலை எப்போது கிடைக்கும்? அரசு அறிவிப்பு

    இந்த மாதிரிப் பள்ளிகளில் தான் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சியும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மாடல் ஸ்கூல் என்றும், மாதிரிப் பள்ளிகள் என்றும் அழைக்கப்பட்டு வந்தன.

    தற்போது இதன் பெயரை வெற்றிப் பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எதுவாக இருந்தாலும் வெற்றி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதிரிப் பள்ளிகளின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    English Summary

    Tamil Nadu Government Model Schools are Renamed as 'Vetri Schools'