சென்னை: முதலமைச்சர் விஜய் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வர இருக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1 ஆம் நாளான இன்று தமிழ்நாடு நாள் விழாவாக சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "வாரத்தில் ஒரு நாள் நீங்கள் பட்டு வேட்டி அணிந்து வரும்போது, கல்யாண வீடு போல அழகாக இருக்கிறது. பார்க்கும்போதே கண்ணுக்கு அழகாக திருவிழா போல இருக்கிறது. அதுபோல அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? என்று முதல்வர் விஜய்யிடம் கேட்டேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் சிரித்துக்கொண்டே, "இது நல்ல யோசனை.. அதிகாரியிடம் இதுகுறித்துக் கேட்டீர்களா?" எனக் கேட்டார். அதற்கு, "உங்களிடம் பேசச் சொன்னார்கள்" என தெரிவித்தேன். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு முதலமைச்சர் விஜய் வெளியிடுவார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதன்முறையாக சொல்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவின்பேரில் நடைமுறைக்கு வர இருக்கிறது" என அறிவித்துள்ளார். மேலும், உலகம் முழுக்க தமிழ்ச் சங்கங்கள் உள்ளன. தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் கட்டியெழுப்பி, ஏற்கனவே செயல்படும் சங்கங்களை ஒருங்கிணைத்து அதற்கு தலைவராக முதலமைச்சரே செயல்படுவார் என்று அறிவித்துக் கொள்கிறோம் என இரண்டாவது அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன். மேலும், அனைவரையும் ஒருங்கிணைத்து, அதற்கு தனி அதிகாரிகளை நியமித்து, உலகத் தமிழ் மாநாடு மீண்டும் தமிழ்நாடு தொடங்கி உலகம் எங்கும் நடக்கப்போகிறது என்பது மூன்றாவது அறிவிப்பு என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.