மேட்ரி மோனி இணையதளங்களில் ஆதார் சரிபார்ப்புக்கு தமிழக அரசு அனுமதி.. இனி என்ன நடக்கும்?

  • கோவை: ஒரு காலத்தில் திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகும்போது, சொந்த பந்தங்கள் அனைவரையும் மொத்தமாக அழைத்துச் செல்வார்கள். அதேபோல மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கவும் உறவினர்களை அழைத்துச் செல்வார்கள்; இவை அனைத்துமே மிகப்பெரிய சம்பிரதாயமாக இருந்தன. ஆனால், இன்றைக்கு இணையதளத்தில் பார்த்தே அனைத்தையும் முடிவு செய்கிறார்கள்.

    Advertisement

    ஆன்லைனில் பெண் அல்லது மாப்பிள்ளை தேடுவதில் நடைமுறையில் பெரிய சிக்கல்கள் உள்ளன. சிலர் ஏற்கனவே திருமணமானதை மறைப்பது, தவறான விவரங்களைக் கொடுப்பது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்தச் சூழலில், மேட்ரிமோனி (Matrimony) இணையதளங்களில் பயனர்களின் அடையாளத்தை உறுதிசெய்ய, தன்னார்வ அடிப்படையில் ஆதார் அட்டைச் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    Advertisement

    இன்றைய இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிவிட்டன. நடிகர்களைப் போன்ற தோற்றம், நல்ல படிப்பு, அதிகச் சம்பளம், நல்ல வேலை, சொந்த வீடு, கார், கடனில்லாத வாழ்க்கை, வார இறுதியில் சுற்றுலா, மாதம் ஒருமுறை வெளியூர் பயணம் என அவர்களின் பட்டியல் நீள்கிறது. இதனால் சரியாகப் படிக்காத, குறைவான சம்பளம் வாங்கும், சாதாரண வேலைகளில் இருக்கும் 30 வயதைக் கடந்த ஆண்களுக்குத் திருமணமே நடப்பதில்லை. அதேபோல, அதிகப்படியான எதிர்பார்ப்புகளைக் கொண்ட பெண்களுக்கும் ஏற்ற வரன்கள் சரியாக அமைவதில்லை.

    இந்த முரண்பாடுகளுக்கு நடுவே, பலரும் உறவினர்களையோ அல்லது புரோக்கர்களையோ வைத்துப் பெண் தேடுவதை விட, ஆன்லைனில் தேடுவதையே அதிகம் விரும்புகிறார்கள். முன்பெல்லாம் ஆன்லைனில் வரன் தேடுவது குறைவாக இருந்தது; ஆனால் இப்போது கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக வரன் பார்ப்பதை அதிகளவில் விரும்புகின்றனர். இதன் விளைவாக, மேட்ரிமோனி தளங்களின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்துவிட்டது.

    Advertisement

    மேட்ரிமோனியில் பதிவிடப்படும் தகவல்கள் அனைத்துமே உண்மையாக இருப்பதில்லை. போலி தகவல்களைக் கொடுப்பது, முந்தைய திருமணத்தை மறைப்பது, விவாகரத்து பெறாமலேயே விவாகரத்து பெற்றுவிட்டதாகப் பொய் கூறுவது, கணவனைப் பிடிக்காமல் பதிவு செய்வது எனப் பல முறைகேடுகள் நடக்கின்றன.

    அதற்காக எல்லாரும் தவறானவர்கள் என்று கூறிவிட முடியாது; நல்ல வரன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், ஏமாற்றுபவர்களும் கண்டிப்பாக இருக்கிறார்கள். எனவே, கவனமாக வரன்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், வெறும் பேச்சுடன் நிறுத்திவிடக் கூடாது. அவர்களின் சொந்த பந்தங்கள் அனைவரிடமும் நேரில் சென்று தீர விசாரிக்க வேண்டும்.

    அவர்களின் குடும்பப் பின்னணி என்ன, வரலாறு என்ன, வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் என்ன, குடும்பத்தினர் படித்தவர்களா, அவர்கள் மீது வழக்குகள் ஏதேனும் உள்ளதா எனப் பல விஷயங்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டும். வரன் நன்றாகப் படித்திருக்கிறார், அழகாக இருக்கிறார் என்று மட்டும் பார்க்காமல், அவரின் பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

    Advertisement

    எதையும் விசாரிக்காமல் திருமணம் செய்தால், உண்மை தெரியும் போது அந்தத் திருமணம் ஒரு வாரம்கூட நிலைப்பதில்லை; ஒன்று பெண் கோபித்துக்கொண்டு வெளியேறுகிறார், அல்லது ஆண் வெளியேறுகிறார். மேட்ரிமோனியல் தளங்களை மட்டுமே நம்பி பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்களுக்கு இத்தகைய சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.

    இப்படி நடக்கும் ஏமாற்றங்களைத் தடுக்க வழிகள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச் சூழலில், அரசு ஒரு புதிய முன்னெடுப்பைச் செய்துள்ளது. மேட்ரிமோனி இணையதளங்களில் பயனர்களின் அடையாளத்தை உறுதிசெய்ய, தன்னார்வ அடிப்படையில் ஆதார் அட்டைச் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்க மாற்றமாக இருந்தாலும், ஒருவரின் பின்னணியை முழுமையாக அறிந்து கொள்வதற்கான சூழல் மேட்ரிமோனியல் தளங்களில் இல்லை என்பதே நிஜமான உண்மை.

    English Summary

    Tamil Nadu government permits voluntary Aadhaar card verification to confirm user identities on matrimonial websites.