சென்னை: தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை விரிவுப்படுத்தவும், விமான சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் விமான எரிபொருளுக்கான (Aviation Turbine Fuel - ATF) 'வாட்' எனும் மதிப்புக்கூட்டு வரியை அதிரடியாக குறைத்துள்ளது. இது நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் விமான டிக்கெட் விலையும் கிடுகிடுவென சரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதிச்சுமையைக் குறைக்கவும், விமானப் பயணங்களை மேலும் பலருக்குக் கொண்டு சேர்க்கவும் தமிழக அரசு வரியைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் விமான எரிபொருளின் மீது விதிக்கப்பட்டு வந்த 29 சதவீத மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 முக்கிய அறிவிப்புகள் தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ளது * அதன்படி சென்னை விமான நிலையத்தில் பட்டியலிடப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. * அதேபோல் சென்னையை தவிர தமிழகத்தில் பிற விமான நிலையங்களான திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம், விமான நிலையங்களில் பட்டியலிடப்பட்ட விமானங்களுக்கான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. * மேலும் சென்னையை தவிர தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் 40 ஆயிரம் கிலோவுக்கு குறைவான எடை கொண்ட சிறிய ரக விமானங்களுக்கான எரிபொருள் வரி 5 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. இந்த வரி குறைப்பு நடவடிக்கை நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 2027 அக்டோபர் 31ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். இதன்மூலம்
விமானச் சேவை விரிவாக்கம் மற்றும் புதிய வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் எரிபொருள் மீதான வரி குறைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் விமான டிக்கெட் கட்டணமும் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.