முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது?

  • சென்னை: தமிழகம் முழுவதும், குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறவுள்ளன. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடக்கவுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,' தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    Advertisement

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    மேலும், TIIC நிறுவனம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது (Lending Plus Service Provide to MSME). இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது. மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2,125/- கோடியாக நிர்ணயத்து முனைப்புடன் பணியாற்றி வருகிறது. திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கு மட்டும் கடன் இலக்காக ரூ.93.00 கோடி இலக்குடன் பணியாற்றி வருகிறோம்.

    Advertisement

    இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC) யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மூலம் திட்ட மதிப்பீட்டில் 95% வரை காலக் கடனாகவும்; 25% முதலீட்டு மானியத்துடன் 3% வட்டி மானியமும் சேர்த்து கடன் அனுமதி வழங்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35% முதலீட்டு மானியம் மற்றும் 6% வட்டி மானியத்துடன் கடன் அனுமதி வழங்கப்படுகிறது.

    Advertisement

    மேலும், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் கடன் அனுமதி வழங்கப்படுகிறது. சேவை துறையில் காற்றாலை, சூரிய ஆற்றல் அமைப்பதற்கும், வணிக வளாகங்கள், குளிர்பதன கிடங்குகள், போட்டோ கலர் லேப், கிட்டங்கிகள் கட்டுவதற்கும் மற்றும் பெட்ரோல் பங்க் நிறுவுவதற்கும் கடன் அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மூல பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு நடைமுறை மூலதனக் கடன் அனுமதியும் வழங்கப்படுகிறது. தகுதி பெறும் உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கி வருகிறது.

    தொடர்ந்து, உற்பத்தி சார்ந்த குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியமாக 25%, கூடுதல் மானியமாக 10% மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5% சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனபதடுத்துவதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5% வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

    Advertisement

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கூடுதல் தகவல்களுக்கு (99626 22939, 94443 96825) என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவலினைப் பெற்றுக்கொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu launches special MSME loan camps in June offering loans, interest subsidies and capital grants up to Rs 1.5 crore.