சூப்பர்..அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! பென்ஷன்தாரர்களுக்கு 30% நிவாரணம்! வெளியானது 'TAPS' அரசாணை


  • சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த ஓய்வூதிய விவகாரத்தில் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகிள்ளது. 'TAPSஸ்' எனப்படும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிமுறைகள் தயாராகி வரும் நிலையில், 2026 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    Advertisement

    இதற்கான அரசாணையை நிதித்துறை வெளியிட்டுள்ளதால், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இது ஒரு முக்கிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வுக்குப் பிறகான வருமான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    TAPS திட்டம்

    இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் நடைமுறைகள் உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், திட்டத்திற்கான முழுமையான விதிமுறைகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், 2026-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் எந்த அளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்ற கேள்வி நிலவி வந்தது.

    Advertisement

    இடைக்கால நிவாரணம்

    இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசு இடைக்கால நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை மாதாந்திர இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும். இதனுடன் தற்போது நடைமுறையில் உள்ள அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பென்ஷன்தாரர்கள்

    இந்த அறிவிப்பு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தாது என்பதும் முக்கியமான அம்சமாகும். 2003 ஏப்ரல் 1-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்கள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இருந்தவர்கள், 2026 ஜனவரி 1-ம் தேதி பணியில் தொடர்ந்து இருந்தவர்கள் மற்றும் அதன்பிறகு வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த சலுகையை பெற தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். மேலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான அரசு சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு

    அதேபோல், பணியில் இருந்தபோதே உயிரிழந்த அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் குடும்ப ஓய்வூதியத்தை நம்பி வாழும் பல குடும்பங்களுக்கும் இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், 2026 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பே ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருந்து விலகியவர்கள் அல்லது தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணம் பெற முடியாது என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் சில தரப்பினரிடம் அதிருப்தியும் உருவாகியுள்ளது.

    அரசு ஊழியர் சங்கங்கள்

    அரசின் இந்த நடவடிக்கையை அரசு ஊழியர் சங்கங்கள் ஒரு அளவிற்கு வரவேற்றுள்ளன. ஓய்வூதிய திட்டம் முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம் என்று அவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெறும் கம்யூட்டேஷன் தொகை, பணிக்கொடை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அரசாணையில் எந்த விளக்கமும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    Advertisement

    பழைய ஓய்வூதியத் திட்டம்

    ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகள் மற்றொரு முக்கிய கோரிக்கையையும் மீண்டும் முன்வைத்துள்ளன. தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது. புதிய திட்டம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களும், கணக்கீட்டு முறைகளும் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    'டேப்ஸ்' திட்டம்

    இந்நிலையில், 'டேப்ஸ்' திட்டத்தின் இறுதி விதிமுறைகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டாலும், நிரந்தர ஓய்வூதிய கணக்கீடு, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அல்லது அடுத்தடுத்த அரசாணைகள் மூலம் அரசு கூடுதல் விளக்கங்களை வெளியிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    English Summary

    Interim pension relief under TAPS brings financial support to eligible government employees and teachers.