வேண்டாம் வில்சன் சார்.. நாங்க தான் கிடைச்சோமா? வெள்ளை அறிக்கையால் வெடித்த அரசு ஊழியர்கள்! என்னாச்சு?

  • சென்னை: தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிராக தற்போது அரசு ஊழியர் சங்கங்களும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, வணிகவரித்துறையின் வருவாய் செயல்திறன் குறைபாடு தொடர்பாக அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அரசு ஊழியர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

    Advertisement

    மேலும், வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலம் முழுவதும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் நிதிநிலை குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் மாநில வருவாய் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததற்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

    வெள்ளை அறிக்கை

    அதில் குறிப்பாக வணிகவரித்துறையின் வருவாய் வசூல் திறன் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்த சில குறிப்புகள் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ஒரு மாநிலத்தின் வருவாய் உயர்வு அல்லது குறைவு என்பது ஒரு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாட்டால் மட்டும் தீர்மானிக்கப்பட முடியாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    வணிகவரித்துறை

    அரசின் கொள்கை முடிவுகள், நிர்வாகத் தலைமையின் செயல்திறன், காலியாக உள்ள பணியிடங்கள், தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அரசியல் முடிவுகள் உள்ளிட்ட பல காரணிகள் இணைந்தே வருவாய் நிர்வாகத்தை பாதிக்கின்றன என்று சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,நிர்வாக சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல், நேரடியாக வணிகவரி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    காலிப் பணியிடங்கள்

    குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல அனுபவமிக்க அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டதாகவும், பல இடங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதன் விளைவாக நிர்வாக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதற்கான பொறுப்பை முழுமையாக ஊழியர்கள் மீது சுமத்துவது தவறான அணுகுமுறை.

    Advertisement

    அமைப்புசார்ந்த ஊழல்

    வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள "அமைப்புசார்ந்த ஊழல்" என்ற குறிப்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டு என அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது அதற்கான ஆதாரங்களையும் அரசு வெளியிட வேண்டும். யார் ஊழல் செய்தார்கள், எந்த அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டது, எந்த விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை ஊழல் நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரங்கள் அரசிடம் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு ஊழியர்கள்

    குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வெள்ளை அறிக்கை என்பது பொதுவாக மாநிலத்தின் நிதிநிலை, வருவாய், செலவுகள் மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து தரவுகள் அடிப்படையில் தயாரிக்கப்படும் முக்கிய ஆவணம். அதில் குறிப்பிட்ட ஆதாரங்கள் இல்லாமல் அரசு ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைப்பது அவர்களின் மனஉறுதியையும் பணிச்சூழலையும் பாதிக்கும். இதுபோன்ற கருத்துகள் வணிகவரித்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் கண்ணியத்தையும் சேவை மனப்பான்மையையும் காயப்படுத்தியுள்ளது.

    Advertisement

    நிதி அமைச்சர்

    எனவே, வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நிதி அமைச்சர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசு ஊழியர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது. இல்லையெனில் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளது.

    போராட்ட எச்சரிக்கை

    தமிழக அரசின் வெள்ளை அறிக்கை ஏற்கனவே அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர் சங்கங்களும் எதிர்ப்பு குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இதற்கு அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதையும், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும் அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    English Summary

    Government employees condemn white paper remarks and warn of statewide democratic protests if comments are not withdrawn.