அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு!

  • சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான அதிநவீன வசதிகளை அரசு மருத்துவமனைகளில் கொண்டு வர முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    Advertisement

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். (DMS) வளாகத்தில் நேற்று மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் தற்போதைய கட்டமைப்பு வசதிகள், ஊழியர்கள் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

    Advertisement

    கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், பொதுமக்களின் மருத்துவத் தேவைகளை மையப்படுத்திய பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 'நோயாளிகள் அனுபவக் கமிட்டி' (Patients Experience Committee) என்ற புதிய குழு அமைக்கப்படும். இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் கூடி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் அடிப்படை வசதிகள், குடிநீர், கழிவறை, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

    அரசு மருத்துவமனைகளின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் வெளிநோயாளி பிரிவு (OP) காத்திருப்பு நேரத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திங்கள், செவ்வாய் கிழமைகளில் ஒரு மருத்துவமனைக்கு 1,000க்கும் மேற்பட்டோர் வருகை தரும் நிலையில், நோயாளிகளும் உடன் வருபவர்களும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதைத் தீர்க்க தனியார் மருத்துவமனைகளைப் போன்று டோக்கன் முறை முன்பதிவு அமைப்பை அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்காக தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பிரத்யேக மொபைல் போன் செயலி (Mobile App) உருவாக்கப்படும். இந்தச் செயலியின் மூலம் பொதுமக்கள் தங்கள் அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி எளிதாக முன்பதிவு செய்யலாம். தினசரி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படும். முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். இதனால் மருத்துவமனைக்கு வந்தவுடன் நீண்ட வரிசையில் நிற்காமல் நேரடியாக மருத்துவரை சந்திக்க முடியும்.
    முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இந்த நடவடிக்கை ஏழை, எளிய மக்களின் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மேலும், அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான உயர்தர சிகிச்சை வசதிகள் ஏற்கெனவே உள்ளன என்று கூறிய அமைச்சர், "காலியாக உள்ள பணியிடங்களில் புதிய நிபுணத்துவ மருத்துவர்கள் (Specialist Doctors) மற்றும் செவிலியர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    மின்தடை பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பெரிய அளவிலான மின்தடை இல்லை என்றும், ஏதேனும் ஏற்பட்டாலும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை (PWD), தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) ஆகியவற்றை உள்ளடக்கிய 'ஒருங்கிணைப்புக் குழு' அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    Advertisement

    இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் இந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

    English Summary

    Tamil Nadu Govt Hospitals Launch Mobile App for Token Booking: End Long Waiting Times for Patients