எங்களால முடியல... 3 நாளா அலைகிறோம்! அரசு மருத்துவமனையில் ஆதார் OTP கட்டாய உத்தரவால் நோயாளிகள் அவதி

  • சென்னை: தமிழ்நாடு முழுக்க அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சீட்டு பெறுவதற்கு ஆதாருடன் லிங்க் செய்யப்பட்ட செல்போனில் ஓடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திடீர் நடைமுறையால் செல்போன் இல்லாத மற்றும் ஓடிபி பெற முடியாத நோயாளிகள், வயதானவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    Advertisement

    இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. பொதுவாக தனியார் மருத்துவமனைகளின் செலவை சமாளிக்க முடியாத ஏழை மக்கள் தான் அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தருவார்கள்.

    Advertisement

    சிரமம்

    இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் திடீரென இப்போது கொண்டு வரப்பட்டுள்ள நடைமுறை பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதாவது இதற்கு முன்பு அரசு மருத்துவமனைகளுக்கு புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவோர் நேரடியாக கவுன்டரில் சீட்டு வாங்கிவிட்டு, மருத்துவரை சென்று பார்க்கலாம்.

    ஓடிபி கட்டாயம்

    ஆனால், இப்போது சீட்டு வாங்கவே ஆதார் ஓடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது நோயாளிகள் தங்கள் ஆதார் நம்பரை சொல்ல வேண்டும். ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓடிபி செல்லும். அந்த ஓடிபியை சொன்னால் மட்டுமே சீட்டு வழங்குவார்கள். மாநிலம் முழுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால் பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக வயதானவர்கள், செல்போன் பயன்படுத்தத் தெரியாதவர்கள் மற்றும் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை அணுக முடியாதவர்கள் புறநோயாளிகள் சிகிச்சைக்கான சீட்டு பெற முடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எங்களால் முடியல

    இதனால் நோயாளிகளுக்கும், செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவமும் நடக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட வயதான நோயாளிகள் கூறுகையில், "எங்களால் முடியவில்லை... நாங்களே வயதானவர்கள்.. சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தால் ஏதோ ஓடிபி கட்டாயம் என்கிறார்கள். 3 நாட்களாக நாங்கள் சிகிச்சை பெற முயல்கிறோம். ஆனால், ஓடிபி இல்லாமல் சீட்டு தர மறுக்கிறார்கள். எங்களுக்கு செல்போன் கூட இல்ல.. நாங்க என்ன பண்ண முடியும்" என்று வேதனை தெரிவித்தனர்.

    Advertisement

    நடைமுறை சிக்கல்கள்

    சிலர் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் வேறு குடும்ப உறுப்பினர்களிடம் இருப்பதால் உடனடியாக ஓடிபி பெற முடியவில்லை என்றும் இதனால் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

    டிஜிட்டல் மயமாக்கல் என்பது நல்லதுதான் என்றாலும் வயதானவர்கள், செல்போன் இல்லாதவர்கள் இதனால் சிரமப்படுகிறார்கள். இதுபோன்ற உத்தரவுகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப உத்தரவில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    English Summary

    Government hospitals across Tamil Nadu have made Aadhaar-linked OTP verification mandatory for issuing OP tickets(அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆதார் ஓடிபி கட்டாயம்): Aadhaar OTP Mandatory for OP Tickets in Tamil Nadu Govt Hospitals.