அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்குறாங்களா.. புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டது தமிழக அரசு

  • சென்னை: ஊழலை சகித்துக்கொள்ளவே மாட்டேன் என்று தமிழக முதல்வர் விஜய், தனது பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து முழங்கி வரும் நிலையில், தமிழக அரசு இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க தனி வாட்ஸ் அப் சேவை எண்ணை அறிமுகம் செய்துள்ளது. 9498180936- என்ற வாட்ஸ் எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும், மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். விஜய் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் கூறி வருகிறார்.

    Advertisement

    வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

    விஜய்யின் இந்த வாக்குறுதி பெயரளவில் இருப்பதாகவும் பல இடங்களில் இன்னமும் மக்களிடம் லஞ்சம் வாங்கும் படலங்கள் தொடர்கிறது என்ற விமர்சனமும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படாமல் இல்லை. எனினும் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஊழல் ஒழிந்துவிட்டதாகவும் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் இது உங்கள் விஜய் ஆட்சி..

    லஞ்சம் வாங்குபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் 94981 80936 என்ற வாட்ஸ் அப் எண்ணில் குறுஞ்செய்தி மூலம் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    யாராக இருந்தாலும் நடவடிக்கை

    இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், அரசு துறைகள் தங்களின் இணையதளத்தில் இந்த வாட்ஸ் அப் எண்ணை வெளியிட வேண்டும். வாட்ஸ் அப் எண்ணுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தில் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லஞ்சம் தொடர்பான புகார்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. மக்கள் பைசாவில் ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன் என்று முதல்வர் விஜய் கூறி வருகிறார். தொடவும் விட மாட்டேன் என்றும் கூறி வருகிறார். முதல்வர் விஜய்யின் இந்த வாக்குறுதி, செயல்பாட்டில் தீவிரமாக இருக்க வேண்டும் எனவும் லஞ்ச புகார்கள் வந்தால் கட்சி பாகுபாடின்றி, எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் என்றாலும் உடனடியாக சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    Advertisement

    மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம்

    பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மட்டுமில்லாமல் கீழே மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்கலாம். மின்னஞ்சல்: dvac@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அதேபோல, தொலைபேசி எண்கள்: 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

    நேரடியாக புகார் அளிக்க விரும்பினால்:

    லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை,
    எண் 293, எம்.கே.என் சாலை,
    ஆலந்தூர், சென்னை 600016

    என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ புகார்களை பொதுமக்கள் அனுப்ப முடியும்.

    English Summary

    Tamil Nadu government has launched a dedicated WhatsApp helpline (9498180936) for the public to report bribery and corruption in government offices. The initiative aligns with Chief Minister Vijay's repeated commitment to enforcing a zero-tolerance policy against corruption and promoting transparent governance.