பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. மிகப்பெரிய சட்டச் சிக்கல்.. விஜய் முன் இருக்கும் சவால்கள்!

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையையொட்டி புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கடலோரப்பகுதி என்பதால், CRZ வகைப்பாடு, EIA அனுமதி என பல்வேறு சிக்கல்களை இந்த திட்டம் எதிர்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் கட்டப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அது தொடர்பான அரசாணை வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்

    புதிய தலைமைச் செயலகம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அரசாணையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட துறைககளுக்குச் சொந்தமான நிலத்தில் இந்தப் புதிய தலைமைச் செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.

    புதிய தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வங்காள விரிகுடாவுக்கு மேற்கிலும், அடையாறு முகத்துவாரத்துக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கடற்கரையை ஒட்டிய ஒட்டிய இடத்தில் பெரிய கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின்படி தேவையான அனுமதிகளைப் பெற வேண்டியது கட்டாயம்.

    Advertisement

    CRZ

    கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பெரிய கட்டுமானத் திட்டங்களில் முக்கியமாகக் கவனிக்கப்படுவது CRZ (Coastal Regulation Zone Map) வகைப்பாடு. CRZ வரைபடம் என்பது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் எந்த நிலம் எந்த CRZ வகைப்பாட்டுக்குள் வருகிறது, அங்கு எந்த வகையான வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதிகள் வழங்கப்படும், எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் என்பதை அறிய உதவும் அதிகாரப்பூர்வ வரைபடம்.

    புதிய தலைமைச் செயலகத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் எந்தப் பகுதி எந்த CRZ வகைப்பாட்டில் வருகிறது என்பதைப் பொறுத்தே, இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும். புதிய தலைமைச் செயலக வளாகத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள நிலத்தின் மொத்தப் பரப்பளவு 21.76 ஏக்கர் என்பதால், இந்த நிலம் வெவ்வேறு CRZ வகைப்பாட்டிற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    CRZ விதிகளை வகுப்பது மத்திய அரசு. கடலோரப் பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, பல அமைப்புகளின் ஒப்புதல் பெற்று அதன் பின்னரே அனுமதி கிடைக்கும்.

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில்

    2003-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயன்றபோதும் சுற்றுச்சூழல் விதிகள் தொடர்பாக பிரச்சனைகள் எழுந்தன. முதலில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க ஜெயலலிதா அரசு முடிவு செய்தது.

    Advertisement

    இதற்கு கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. கல்லூரிக்கே சென்று மாணவிகளைச் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    ராணி மேரி கல்லூரியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முயன்ற காலகட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் திமுகவின் டி.ஆர்.பாலு. 2003 ஏப்ரல் 22 ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் CRZ விதிகளில் ஒரு திருத்த அறிவிக்கையை வெளியிட்டது.

    Advertisement

    டிஆர் பாலு

    இதற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். திமுக திட்டமிட்டு, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு இடையூறு செய்வதாக ஜெயலலிதா தெரிவித்தார். ராணி மேரி கல்லூரியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடுப்பதற்காகவே டி.ஆர்.பாலு CRZ விதியை மாற்றினார் என ஜெயலலிதாவின் குற்றம்சாட்டினார்.

    மேலும், இதனை மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்தார். கடலோர மாநிலங்களுடைய செயல்பாட்டினை முடக்கக்கூடிய வகையில் அறிவிக்கை வெளியிடுவதற்கு மத்திய அமைச்சருக்கு அதிகாரமில்லை என்று ஜெயலலிதா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை டி.ஆர்.பாலு கலந்தாலோசிக்கவில்லை, மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கவில்லை என்றும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

    EIA அனுமதி விவகாரம்

    ராணி மேரி கல்லூரி நிலத்தில் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டம் சட்ட மற்றும் அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா அரசு புதிய தலைமைச் செயலகத்துக்கான இடமாக கோட்டூர்புரத்தைத் தேர்வு செய்தது. இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் பெரிய கட்டுமானங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான மற்றொரு முக்கியமான மாற்றம் மத்திய அரசு தரப்பில் வந்தது.

    இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. அங்கு சாதகமான நிலை ஏற்பட்டபோதும், பின்னர் கோட்டூர்புரம் தலைமை செயலக திட்டத்தின் சில கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிலையில் அந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா கைவிட்டார். பின்னர் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் செயல்படும் வகையில் ஒமந்தூரார் வளாகம் கட்டப்பட்டது. அது அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

    விஜய் அரசுக்கு முன் இருக்கும் சவால்கள்

    தற்போது விஜய் அரசின் புதிய தலைமைச் செயலகம் சுமார் 20 லட்சம் சதுர அடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய EIA விதிகளில் 1.50 லட்சம் சதுர மீட்டர் அல்லது அதற்கு அதிகமான கட்டுமானப் பரப்பளவு கொண்ட திட்டங்கள் Entry 8(b) - Township and Area Development Projects பிரிவுக்குள் வருகின்றன. எனவே, இந்தத் திட்டத்துக்கு EIA விதிகளின்படி முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

    கடற்கரையோர நிலம் என்பதால் CRZ வகைப்பாடு பிரச்சனை, 20 லட்சம் சதுர அடி கொண்ட பெரிய கட்டுமானம் என்பதால் EIA - இந்த இரண்டு சுற்றுச்சூழல் அனுமதிகளையும் விஜய்யின் புதிய தலைமைச் செயலகத் திட்டம் பெற வேண்டியிருக்கும். இதுதான் விஜய்யின் பட்டினப்பாக்கம் திட்டம் எதிர்கொள்ளும் முக்கியமான சட்டச் சிக்கல்.

    இவற்றைக் கடந்து, திட்டமிட்டபடி, முதலமைச்சர் விஜய்யால், இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா? அல்லது நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

    English Summary

    Tamil Nadu government has issued a Government Order to construct a new Secretariat complex near the beach in Pattinapakkam, Chennai. As the site is located in a coastal area, the project is expected to face various challenges, including issues related to CRZ classification and EIA clearance.