திருமண மண்டபமா? கோவில்களின் நிதி கோவில்களுக்கு மட்டும் தான்! ரூ.246 கோடி பிற திட்ட பணிகள் அதிரடி ரத்து

  • சென்னை: தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி கோவில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும். திருமண மண்டபம், வணிக வளாகங்கள் கட்ட பயன்படுத்த கூடாது என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நிதியில் இருந்து அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட இருந்த 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிக்கான நிர்வாக அனுமதியும், 17 வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதியும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இந்து அறநிலையத்துறை அமைச்சராக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    இந்து அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றது முதல் அதிரடியாக பல்வேறு கோவில்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தான் தற்போது புதிய உத்தரவை அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கோவில்களில் கிடைக்கும் வருவாய் கோவில்களை தாண்டி பிற விவகாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதனை கைவிட வேண்டும் என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில் தான் இந்து அறநிலையத்துறை கோவில்களில் கிடைக்கும் வருமானம் கோவில்களின் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும் அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட இருந்த 29 திருமண மண்டபங்கள், 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிக்கான அனுமதி அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 49 பணிகளுக்கான அனுமதி அதிரடியாக ரத்து செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், '' கோவில்களின் நிதி நிலைமை மற்றுமு் சட்ட ரீதியிலான தடைகளை கருத்தில் கொண்டு ரூ.245.85 கோவி மதிப்பிலான திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட 46 கட்டுமான திட்டங்களுக்கான நிர்வாக அனுமதியை இந்து சமய அறநிலையத்துறை திரும்ப பெற்றுள்ளது. இந்த திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு காணங்களால் செயல்படுத்தப்படாமல் தாமதப்பட்டு வந்தது. நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட இடைக்கால தடைகள் காரணமாக சில திட்டங்களை தொடங்க மடியாமல் போனது. அதேவேளையில் கோவில்களின் நிதி நிலைமையை மறுமதிப்பீடு செய்து செலவினங்களில் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன்மூலம் ரூ.115.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருந்த 29 திருமண மண்டபங்கள், ரூ.130.08 கோடி மதிப்ப்பீட்டில் கட்டப்பட்ட இருந்த 17 வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வரும் காங்களில் கோவில்கள் மற்றும் பக்தர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறையில் மிக விரைவில் மிகப்பெரிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். திருக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும், அந்தந்த கோவில்களின் நற்பணிகளுக்கும் மற்றும் ஆன்மீக நலன்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது முற்றிலும் உறுதி செய்யப்படும்.

    Advertisement

    கோவில் சொத்துக்கள் மற்ற பிற காரியங்களுக்குத் திசைதிருப்பப்படுவது தடுக்கப்படும். கோவில்களின் அசையும், அசையா சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது இந்த அரசால் உறுதிப்படுத்தப்படும் இதனால் கோவில் சொத்துக்கள் முழுமையாக ஆன்மீக மற்றும் பக்தர்களின் தேவைகளுக்காக மட்டுமே செலவிட புதிய கட்டமைப்பு வழிவகை செய்யும்'' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    HRCE Department: A decisive order has been issued stating that funds belonging to temples under the administration of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department must be spent exclusively on the temples themselves and not utilized for the construction of wedding halls or commercial complexes. Consequently, administrative sanctions for the construction of 29 wedding halls and 17 commercial complexes-originally planned by the Department using temple funds-have been abruptly cancelled.