திமுக, அதிமுக என எந்த ஆட்சி மாறினாலும் 'கெத்து' காட்டிய ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த ஜெ. ராதாகிருஷ்ணன்?

  • சென்னை: மின்வாரிய தலைவராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த ஜெ.ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்துறையின் கூடுதல் செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத், தற்போது தொழில்துறை ஆணையர் மற்றும் வணிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையர் மற்றும் வணிக இயக்குநராக இருந்த நிர்மல் ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்துத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐஏஏஸ் அதிகாரிகள் மாற்றம்

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக இருக்கும் பிரதீப் யாதவ் இடமாற்றம் செய்யப்பட்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சிறப்புச் செயலாளராக உள்ள சுந்தரவல்லி, தற்போது பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் செயலாளராக இருந்த காகர்லா உஷா, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைச் செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ரத்னா, தொழிலாளர் ஆணையராக வள்ளலார், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளராக தாமஸ் வைத்தியன், கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், அருங்காட்சியகங்களின் இயக்குநராக பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நில நிர்வாக ஆணையராக இருந்த கஜலட்சுமி, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் ஆணையராக இருந்த பூஜா குல்கர்னி, தற்போது தமிழ்நாடு உள்கட்டமைப்பு அபிவிருத்தி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    யார் இந்த ராதாகிருஷ்ணன்?

    1966ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியில் பிறந்த ஜெ. ராதாகிருஷ்ணன், பெங்களூரில் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தவர். 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் கேடரை சேர்ந்த ஜெ. ராதாகிருஷ்ணன், 1994இல் தூத்துக்குடியில் துணை ஆட்சியராக தன் பணியைத் துவங்கி, நிதித் துறை துணைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், சேலம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் போன்ற பல பதவிகளை வகித்தவர்.

    ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோதுதான், 2004ல் சுனாமி தாக்கியது. அப்போது அவர் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். நாகப்பட்டினத்தில் சுனாமி நிவாரணப் பணியில் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வெகுவாகப் பாராட்டினார்.

    Advertisement

    முக்கிய பொறுப்புகள்

    சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அங்கு நடந்து வந்த சிசுக் கொலைகளைத் தடுக்க இவர் எடுத்த முயற்சிகள் பாராட்டுகளைப் பெற்றன. 2012ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலராக பொறுப்பில் இருந்தார் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன். 2012இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு, தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இருந்தவர் என்பதாலும், 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தததும் பணி இடமாற்றத்துக்கு உள்ளாகும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ராதாகிருஷ்ணனும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், திமுக ஆட்சியிலும் ஜெ.ராதாகிருஷ்ணன் முக்கிய துறைகளில் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார். கூட்டுறவுத் துறை செயலராகவும், சுகாதாரத்துறை செயலராகவும், பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றிய ஜெ.ராதாகிருஷ்ணன் அதன்பிறகு மின்சார வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

    Advertisement

    திமுக ஆட்சியிலும் முக்கிய பதவி

    முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த 4 பேரில் ஜெ. ராதாகிருஷ்ணனும் ஒருவர்.

    ஸ்டாலின் 1996 முதல் 2002ஆம் ஆம் ஆண்டு வரை மேயராக இருந்த காலக்கட்டத்தில் அவரது டீமில் சிறப்பாக பணியாற்றியவர் ஜெ.ராதாகிருஷ்ணன். அந்த காலகட்டத்தில் தான் சிங்காரச் சென்னை திட்டத்திற்கான விதை போடப்பட்டது. அந்த நெருக்கத்தின் அடிப்படையிலேயே திமுக ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்.

    ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றம்

    இந்நிலையில் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி (AASC) என்பது தமிழ்நாட்டின் முதன்மையான அரசுப் பயிற்சி நிறுவனம். அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிர்வாகத் திறன்கள், மேலாண்மை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்குகிறது. இது சென்னை, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ளது. இதன் இயக்குநராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    Tamil Nadu government has issued orders transferring several IAS officers, including J Radhakrishnan, who served as the Chairman of the Electricity Board. J. Radhakrishnan, who held various key positions during both DMK and AIADMK tenures, has been transferred as the Director of AASC.