சென்னை: தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு எம் சாண்ட், ஜல்லி கற்கள், கருங்கல், குண்டு கற்கள் ஆகிய கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தேவைக்கு குறைவாகவே கனிம வளங்கள் உள்ளதால் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிமெண்ட், கம்பி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால், வீடுகளின் ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு திட்டமிட்ட பட்ஜெட்டைத் தாண்டி எகிறியுள்ளது. வங்கிக் கடனை நம்பி, தங்களின் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து சொந்த வீடு கட்டத் தொடங்கிய நடுத்தர வர்க்க மக்கள், தற்போது மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கட்டுக்கடங்காத விலையேற்றம் காரணமாக வேதனையடைந்து வருகின்றனர். வீடு கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானத் தொழில் முடக்கத்தைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வர் விஜய் வழிகாட்டுதலைத் தொடர்ந்து கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆலோசனையில் அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கனிம வளங்கள் ஏற்றுமதியில் புதுச்சேரி, காரைக்காலுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது, தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை ஏற்றுமதி செய்ய 3 மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.