அந்த அமைச்சர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறார்.. தட்டி வையுங்கள்.. இல்ல சிக்கல்தான்.. பறந்த மெசேஜ்

  • சென்னை: 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியில் 2 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற அவரவர்கள் லாபியை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் தொடங்கும் போது, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்கிற பரபரப்பு சத்தியமூர்த்தி பவனில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

    Advertisement

    தமிழக காங்கிரசின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு முதல் முறையாக நேற்று நடந்தது. அதில் பல்வேறு விவகாரங்கள் அலசப்பட்டன.

    Advertisement

    தமிழக காங்கிரசின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர்

    எம்.பி.க்கள் பலரும் பேசினர். டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி. பேச்சு, அனைவராலும் கவனிக்கப்பட்டது. அவர் பேசும்போது, ''காங்கிரஸ் கட்சியில் பல்வேறு நிலைகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும். புதிய தலைமை அதில் சீரியசாக இருப்பது நல்லது. மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த காலங்களில் உரிய மரியாதை கிடைக்கவில்லை. இனியாவது அந்த மரியாதை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் புதிய தலைமை மாறும் போது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடுகிறது. இதனால் கோஷ்டி அரசியல்தான் வளர்ச்சிப்பெறுகிறதே தவிர, கட்சி வளர்ச்சி அடைவதில்லை'' என்று காட்டமாக பேசினார். இதற்கு கைத்தட்டல்கள் பறந்துள்ளன.

    Advertisement

    தவெக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

    தொடர்ந்து பேசிய அவர், ''தவெக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். அதில் ஒருவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். அது பல்வேறு தரப்புகளின் கண்டனங்களையும் எதிர்கொண்டது. இனி இது போன்று சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை அமைச்சர்கள் உருவாக்கக்கூடாது.

    சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்

    அதில் கவனமாக இருக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராஜேஷ்குமார், தற்போது அமைச்சராகவும் இருக்கிறார். ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அளவுகோலில் அவரிடமிருக்கும் சட்டமன்றத் தலைவர் பதவியை நம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் வேறு ஒருவருக்கு தர வேண்டும். இது குறித்து மேலிடத்தில் கலந்து பேசி ஒரு முடிவை எடுக்க புதிய தலைமை முன் வர வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தார்.

    Advertisement

    கவனமாக இருங்கள்

    இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறார் மாணிக்கம் தாகூர். இதனால், 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியில் 2 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற அவரவர்கள் லாபியை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

    பொதுவாக கோஷ்டி மோதலையும்.. காங்கிரஸ் கட்சியையும் பிரிக்க முடியாது. உடலும் உயிரும் போல பிரிக்க முடியாதது கோஷ்டி மோதலும் காங்கிரஸ் கட்சியும். தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற அதே கோஷ்டி மோதல் காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கூட மாணிக்கம் தாகூருக்கு நெருக்கமான ஒரு நிர்வாகியே சட்டமன்ற குழுத்தலைவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் தொடங்கும் போது, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்கிற பரபரப்பு சத்தியமூர்த்தி பவனில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Tamil Nadu INC party going to face lot of changes as Manickam Tagore become the chief of Congress