தமிழகத்தில் பத்திரப்பதிவில் மிகப்பெரிய மாற்றம்.. சென்னை, செங்கல்பட்டு, கோவையில் புதிய சிஸ்டம்

  • சென்னை: இறப்பு, வாரிசுரிமைச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஏ.பி.ஐ. மூலம் நிகழ் நேரத்தில் சரிபார்க்கப்படும். வங்கிகள் கடன் வழங்கும்போது உரிமை ஒப்படைப்பு ஆவணங்கள், ரசீது ஆவணங்கள் மற்றும் குடும்ப தான பத்திரங்கள், பாகப்பிரிவினை ஆவணங்கள் ஆகியவை அக்டோபர் 15 முதல் நேரில் வருகை இல்லாத மற்றும் காகிதமில்லா பதிவு கட்டாயம் ஆக்கப்படும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும் சேவை (தனியார்) நிறுவனத்தின் மூலம் மையங்கள் நிர்வகிக்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார.

    Advertisement

    சட்டசபையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், வணிகவரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறுகையில், "நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் (வடக்கு) ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் இவை அமைக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும் சேவை (தனியார்) நிறுவனத்தின் மூலம் மையங்கள் நிர்வகிக்கப்படும். பொதுமக்கள் இம்மையங்கள் மூலமாகவோ அல்லது உரிய சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாகவோ சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

    Advertisement

    ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    பணிப்பளு மிக்க 25 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் வளங்கள் வழங்கி, அன்றே ஆவணங்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பதிவுத்துறையின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆலோசனை நிறுவனமாக நியமிக்கப்படும்.

    இறப்பு, வாரிசுரிமைச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஏ.பி.ஐ. மூலம் நிகழ் நேரத்தில் சரிபார்க்கப்படும்.

    சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல் இணையவழியில் ஆவணப் பதிவு செய்யும் திட்டம் அடுத்த 12 மாதங்களில் செயல்படுத்தப்படும்.

    வங்கிகள் கடன் வழங்கும்போது உரிமை ஒப்படைப்பு ஆவணங்கள், ரசீது ஆவணங்கள் மற்றும் குடும்ப தான பத்திரங்கள், பாகப்பிரிவினை ஆவணங்கள் ஆகியவை அக்டோபர் 15 முதல் நேரில் வருகை இல்லாத மற்றும் காகிதமில்லா பதிவு கட்டாயம்.

    Advertisement

    தடை செய்யப்பட்ட நில விவரங்களை நேரடியாக பதிவு செய்ய இந்து சமய அறநிலையத்துறை, வக்பு வாரியத்துடன் ஏ.பி.ஐ. இணைப்பு ஏற்படுத்தப்படும்.

    2018 முதல் பதிவு செய்யப்பட்ட திருமணம் உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்கள் கட்டணம் செலுத்தியதும் இணையவழியில் அனுப்பப்படும்.

    வருகையில்லா மற்றும் காகிதமில்லா பதிவு முறைகளை செயல்படுத்தி, சார்பதிவாளர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை.

    சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் மூலம் வணிகர்களின் குறை தொடர்பான மனுக்கள் மீது தீர்வு காண ஒரு சீர்மிகு இணையதள வசதி உருவாக்கப்படும்.

    பொதுமக்களுக்கு எளிதான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையவழி மூலம் எளிதில் பத்திரப்பதிவு நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, எந்த ஒரு பரிவர்த்தனையையும் சட்டப்பூர்வமாகவும், எந்த ஒரு தவறான நடவடிக்கைையிலும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

    Advertisement

    காலதாமதம் மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றி அதன் மூலம் சரிபார்க்கும் நடைமுறை எளிமையாக்கப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.

    பதிவுத்துறை தொடர்பான கூடுதல விவரங்கள்

    வணிக வரி வருவாய்: ₹1.43 லட்சம் கோடி - 4.4% அதிகரிப்பு
    ஜிஎஸ்டி (GST) வருவாய்: ₹78,120 கோடி - 3.4% அதிகரிப்பு
    முத்திரைத் தாள் கட்டண வருவாய்: ₹25,546 கோடி - 16.3% உயர்வுடன் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் பெற்றுள்ளது
    பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்: 35.51 லட்சம்
    சொத்து பரிமாற்ற கூடுதல் கட்டணம்: ₹4,380 கோடி (இதில் ₹4,248 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது)

    Advertisement

    வணிக வரித் துறை, டிசம்பர் 2023-ல் தொடங்கிய மூன்று ஆண்டு கால 'பெரிய தரவுப் பகுப்பாய்வுத் தீர்வு' (Big Data Analytics Solution) திட்டத்திற்காக ஐஐடி (IIT) ஹைதராபாத்துடன் இணைந்துள்ளது. வருவாய் இழப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறியவும், வரி வசூலை மேம்படுத்தவும் இத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

    2018-19 முதல் 2023-24 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வரி செலுத்துவோர் மீதான ஆய்வுகள் மற்றும் வருவாயை அதிகரிக்கும் பிற நடவடிக்கைகள் மூலம், டிசம்பர் 2023 முதல் மார்ச் 2026 வரையிலான காலத்தில் சுமார் ₹6,220 கோடி வருவாயை இத்துறையால் ஈட்ட முடிந்துள்ளது.

    English Summary

    Tamil Nadu is planning a major upgrade to its property-registration system. 25 Model Registration Hubs across major districts; Instant digital certificates and faster document processing, Real-time verification to prevent fraudulent registrations