சென்னை: தமிழகத்தில் மின் துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புகார் பெறப்பட்டு உடனடியாகத் தீர்வு காணும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் TNEB CHATBOT வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின் வெட்டு, மின்சார பற்றாக்குறை பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், மின் வாரியத்தில் புகார் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில், மின் வாரியத்தை எளிதில் தொடர்புகொள்ள 24 மணி நேரமும் செயல்படும் 'சாட் பாட்' வசதியை அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு மின் வாரியம்.
இதுகுறித்து தமிழக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக மின்சார வாரியம், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு, மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை எளிதாக அளிப்பதற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, மின்சார சேவைகள் குறித்த புகார்களை விரைவாகக் கையாளுவதற்கும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்த்து, குறித்த காலத்தில் தீர்வு வழங்குவதற்கும் ஏதுவாக 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்ஆப் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெற வாட்ஸ்ஆப் செயலியில் 94987 94987 என்ற எண்ணுக்கு 'ஏஐ' எனப் பதிவிட வேண்டும். இதையடுத்து, தொலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் புகார் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, புகாரை சீர் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும். மின்சார சேவை தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, சிறப்பான மின்சார சேவையை வழங்குவதற்கு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.