சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 15.06.2026 முதல் 19.06.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி நடைபெறவுள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலோக தரம் அறிதல், உரைகள் பயன்படுத்தும் முறை காரட் & காரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate) ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், தங்கம் (999% 916%, 85%, 80%, 75%) தரம் அறிதல், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை, IS ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள், ஹால் மார்க் தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்கான வழிமுறைகள் ஆகியன கற்றுத் தரப்படும்.
மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை குறித்த தகவல்களும் வழங்கப்படும். மத்திய / மாநில அரசுகள் அரசு கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை -600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்"என கூறப்பட்டுள்ளது.