தமிழ்நாடு சட்ட ஆணையத் தலைவராக நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் நியமனம்.. யார் இவர்?

  • சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு, புதிய தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு தலைவர் மற்றும் முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், நியமிக்கப்பட்டுள்ளார்.

    முழு நேர உறுப்பினர்கள்

    நீதிபதி ஆர்எம்டி டீக்கா ராமன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
    டி.கே.ராமச்சந்திரன் ஐஏஎஸ், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழக அரசு
    ஏ. அருணகிரி, சட்டத்துறை முன்னாள் செயலாளர்

    பகுதி நேர உறுப்பினர்கள்

    பி. மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட நீதிபதி
    ஆர். கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட நீதிபதி
    சட்டத்துறை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி - முழு நேர உறுப்பினர் செயலாளர்

    இதன் பணிகள்

    நடைமுறையில் உள்ள சட்டங்களின் குறைபாடுகளை நீக்க பரிந்துரைத்தல்
    சமூக, பொருளாதார சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரை வழங்குதல்
    மத்திய- மாநில உறவுகள், மாநிலங்களிடையேயான உறவுகள் தொடர்பான பரிந்துரைகள் அளித்தல்.
    நீதித்துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்த பரிந்துரைத்தல்
    தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மத்திய மற்றும் மாநில சட்டங்களை சீரமைக்கும் பரிந்துரைகள் அளித்தல்
    தமிழ்நாட்டின் சட்டங்கள், விதிகளை பகுப்பாய்வு செய்து பரிந்துரைத்தல்

    Advertisement

    தற்போதைய ஆணையத்தின் தலைவர், பகுதி நேர- முழு நேர உறுப்பினர்களின் பதவி காலம், பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள்.

    யார் இந்த நீதியரசர் கிருஷ்ணகுமார்?

    நீதியரசர் கிருஷ்ணகுமார், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். 1987ல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமிக்கு ஜூனியராகப் பணியாற்றினார். 1991 முதல் 1996 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1998 முதல் 1999 வரை கூடுதல் மத்திய அரசு நிலைக்குழு வழக்கறிஞராகவும், 2001 முதல் 2006 வரை சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    2016 ஏப்ரல் 7 அன்று அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2024ல், சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

    Advertisement

    கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற டி.கிருஷ்ணகுமார், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    English Summary

    Tamil Nadu State Law Commission has been reconstituted, and D Krishnakumar, former Chief Justice of the Manipur High Court, has been appointed as its new Chairperson.