மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?

  • சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கு தடை கோரி தமிழக அரசு தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளது.

    Advertisement

    சுற்றுச் சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும், தமிழக அரசின் நகர்வும்

    மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கை (DPR) இன்னும் பரிசீலனை அளவிலேயே இருப்பதால், இப்போதே தடை கோருவது முன்கூட்டிய நடவடிக்கை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

    இருப்பினும், கர்நாடகா தரப்பில் அணைக் கட்டுமானத்திற்கான 'பூமி பூஜை' நடத்த ஆயத்தப் பணிகள் நடப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காவிரி நதிநீர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்க உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Advertisement

    புதிய வழக்கு

    உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இம்முறை சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சட்டங்களை முன்வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

    காடுகள் அழிப்பு: மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் பெரும்பகுதி மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அடர்ந்த காடுகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

    பல்லுயிர் பெருக்கம் பாதிப்பு: இந்த வனப்பகுதியில் உள்ள யானைகள், புலிகள் மற்றும் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    விதிமீறல்: உரிய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வனத்துறை அனுமதிகள் இல்லாமல் கர்நாடக அரசு பணிகளைத் துவங்க முயல்வது சட்டவிரோதம் என தமிழக அரசு வாதிடுகிறது.

    Advertisement

    முக்கியப் புள்ளி: மேகதாதுவில் சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட அணையைக் கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இது கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வர வேண்டிய இயற்கையான நீர்வரத்து முற்றிலுமாகத் தடைபடும் என்பது தமிழகத்தின் பிரதான கவலை.

    மேகதாது அணைக்கான உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசு, காவிரி நீர் வாரி நிகம் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச் சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    Advertisement

    பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

    ஒருபுறம் சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாகவும் கர்நாடகா கொண்டு வரும் இந்த மேகதாது திட்ட அறிக்கையை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், காவிரியின் சூழலியல் பாதிப்பைக் கையில் எடுத்து பசுமை தீர்ப்பாயம் மூலம் கர்நாடகாவின் பூமி பூஜை திட்டங்களுக்கு 'செக்' வைக்கத் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்த பசுமைப் போர் தமிழக விவசாயிகளுக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    The Government of Karnataka is making vigorous efforts to construct a new dam across the Cauvery River at Mekedatu. This move has sparked severe opposition from all quarters, including the Government of Tamil Nadu, farmers, and political parties. Against this backdrop, the Government of Tamil Nadu has now filed a fresh petition with the National Green Tribunal, seeking a stay on this project.